Monday 27 February 2023

ஞால ஞதி - சிறுகதை - விஜய் பீமநாதன்.

 

தனது காய்கறி கடையில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்தும், அதை பெரிதும் பொருட்படுத்தாமல், ஒரு நீட்டு கம்பை தேடிக்கொண்டிருந்தாள் நடுத்தர வயதுடைய மாநிற வசந்தா. அந்த கம்பை தேடுவதில் இருந்த மும்முரம், கடையை கவனிப்பதில் இல்லை. ஒரு வழியாக அருகில் இருந்த இரு கம்புகளை சேர்த்து இணைத்து ஒரு நீட்டு கம்பை உருவாக்கிவிட்டு ஏதோ ஒரு பெருமிதத்துடன் கடையை கவனிக்க வந்தாள் வசந்தா.

வெண்டையும் முருங்கையும் அங்கு அதிகம் விற்கும். அந்த கடையில் வாங்க வந்திருக்கும் பாதிபேர் அவளுடன் வசிக்கும் சக ஒண்டுக்குடுத்தனக்காரர்கள். ஆம், வசந்தா வசித்து வருவது ஓர் அடுக்குமாடி குடியிருப்பு. கிட்டத்திட்ட அதில் 50திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பாதி வீடுகளில் வாடகைக்கு இருக்கிறார்கள். மீதி, கடனில் வாங்கிய வீடுகள். வசந்தாவின் வீடும் கடனில் தான் உள்ளது. .எம். யை கட்ட தன் நிழலை தாண்டி ஓடிக்கொண்டிருந்தாள். விபாரத்தின் பொழுது, அந்த நீண்ட கம்பை தன் காலடியில் இருக்குமாறு வைத்துக் கொண்டாள். அப்போது, ஒரு வாடிக்கையாளர்,

"என்னம்மா வெண்டக்கா இன்னிக்கி இவ்ளோ முத்தலா இருக்கு?" என்றார்.

"வேணும்னா எடுத்துக்கோங்க இல்லனா ஆளா விடுங்க" என்று நொந்துகொண்டு பதில் சொன்ன வசந்தா, தன் 5 வயது ஒரே மகன் "சீனுவாசன்" என்ன செய்துகொண்டிருக்கிறான் என்று தெரிந்து கொள்ள தனது மாமியாரை போனில் அழைத்தாள். மொட்டை மாடியில் துணி காயப்போட்டுக்கொண்டிருந்த அவளது மாமியார் போனை எடுத்து, சீனு கீழே கார் பார்கிங் இடத்திலே விளையாடுவதாக பதில் அளித்தார். சற்று சினங்கொண்டு மூக்கை புடைத்தவாறு,

"என்ன அத்த, இப்படி பண்றீங்க. புள்ள புடிக்கறவங்க அதிகமா அலையுறதா கேள்வி. இப்ப போய் அவன தனியா விளையாடவிடலாமா" என்று கடிந்து கொண்டாள். சற்று நேரத்தில் கீழே சென்று அவனை அழைத்து வருவதாக பதில் வந்ததால் போனை துண்டித்தாள். அப்போது, வேறொரு வாடிக்கையாளர்,

"எம்மோ, அங்க பாருங்க. உங்க காய்கறி எல்லாம் அந்த மாடு சாப்பிடுது" என்றார். அந்த வார்த்தைகள் அவள் காதில் விழுந்தது தான் தாமதம். தான் பிரத்யேகமாக செய்து வைத்திருந்த நீட்டு கம்பை எடுத்து அந்த மாட்டை ஒரே விரட்டாய் விரட்டினாள்.

அது "உன் கடையில் உண்ணுவது ஒரு குற்றமா?" என்று மிரண்டபடி நடு ரோட்டிற்கு ஓடியது. அந்த ரோடு புதிதாக போடப்பட்ட நான்கு வழி புறவழிச்சாலை. வேகமாக வந்த பைக்கை அந்த மாடு மோதியது. அந்நொடியே பைக் ஓட்டிய நபர் கீழே வழுக்கி விழுந்து கை காலில் ரத்தம். அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். அங்கு கூடிய பொது மக்களில், பலர் வீடியோ எடுத்து FB-யில் போட்டனர், சிலர் ரத்தம் வரும் இடங்களில் கட்டும் போட்டனர். அவசர ஊர்தியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

"மாடுகளை இவ்வாறு ரோட்டில் அலையவிடும் வரை இந்தியா முன்னேறாது"

"இப்படி வேகமா ஓட்டினா விபத்து ஏற்படாம என்ன பண்ணுமாம்?"

"இங்கே கோசாலைகள் மிகவும் குறைவு" என்று பொதுமக்கள் பலரும் பலவிதமாக பேசிக்கொண்டனர். ஆனால் இந்தியாவோ கோசாலையோ அதற்கு காரணம் இல்லை, நம் வசந்தா தான் காரணம் என்று அதில் எவருக்கும் தெரியாது. போதாக்குறைக்கு, வசந்தா விபத்து ஏற்பட்ட நொடியே, தன் காய்கறி கடை கூடாரத்தின் பின்புறம் ஒளிந்து கொண்டாள். இந்த 30 நிமிட களேபரத்தில், தன் மாமியாரிடமிருந்து வந்திருந்த பல அழைப்புக்களை கவனிக்கத் தவறினாள் அவள். "இந்த அத்தைக்கு வேற வேலையே இல்ல, சும்மா சும்மா கூப்பிட்டுக்கிட்டு" என்று உதட்டளவில் முணுமுணுத்தவாறே போன் செய்தாள். மறுமுனையில் இருந்த வந்த செய்தி வசந்தாவை உறையச்செய்தது. தன் மகன் சீனுவை காணவில்லை என்பது தான் அந்த செய்தி. காய்கறி கடைக்கும் அப்பார்மெண்டிக்கும் 100 கஜ தூரம் தான் இருக்கும். கடையை அப்படியே விட்டுவிட்டு, பின்னங்கால் பிடரியில் அடிக்க வீட்டிற்கு ஓடினாள். கீழே, அவளது மாமியாரும், செக்யூரிட்டியும் முகத்தில் கலவரத்துடன் குழந்தை சீனுவை தேடிக்கொண்டிருந்தனர். வீட்டை அடைந்த அவள், இடுப்பில் புடவை கொசுவத்தை சற்று ஏற்றி சொருகி, கண்களை துடைத்தவாறு,

"எங்க என் பையன் சீனு, அத்தை உங்களத்தான், பதில் சொல்லுங்க" என்று கனத்த குரலில் புருவங்களை உயர்த்திக் கேட்டாள்.

"துணிய காயப்போட்டுட்டு வந்து பாத்தா, பேரான காணும்" என்று தலையை தொங்கபோட்டுக்கொண்டபடியே பதில் வந்தது. உடனடியாக தன் கணவர் சங்கருக்கு போன் செய்து செய்தியை கூறினாள். சங்கரும் அலறியடித்துக்கொண்டு ஓடி வந்தான். தன் அம்மாவையும் மனைவியையும் நன்கு வசைபாட்டுபாடினான்.

"உங்களலாம் வச்சிக்கிட்டு ஒரு புண்ணியமும் இல்லை. நான் பைக்ல போய், அக்கம் பக்கம் எங்காவது இருக்கானான்னு தேடிட்டு வர்றேன்" என்று வெளியே சென்றான். அப்போது,

"அத்தை, நம்ம சீனு கூட யார் யார்லாம் விளையாடுனது? அவங்கள கேட்டா எதாவது பதில் நமக்கு கிடைக்கும்" என்றாள் வசந்தா. யார் யார் அந்த ஏனைய சிறுவர்கள் என்று அத்தை கூற, அவர்களிடம் விசாரணை நடத்தினாள் வசந்தா. சிறுவர்கள் கண்ணாமூச்சி விளையாடியதாகவும், சீனுவும் உடன் இருந்தான் என்றும், அவனிடம் "பாய்" சொல்லிவிட்டே சென்றதாகவும் தெரிவித்தனர். அதற்குள்ளாக, சி.சி.டி.வி கேமராவை பார்த்துவிட்டு வந்தார் செக்யூரிட்டி.

"கேமரால ஒரு அடையாளம் தெரியாத பைக், ஒரு கருப்பு மூட்டைய பின்னாடி வச்சிக்கிட்டு போகுறத பார்த்தேன்" என்றார் நடுங்கிய குரலில். வசந்தாவிற்கு ஈரக்குலையே நடுங்கியது.

"என்னண்ணே சொல்றீங்க... சீனு எங்கயாவது பக்கத்துல மாடி படிக்கு அடிலையோ இல்லனா யார் வீட்டிலையோ ஒளிஞ்சுக்கிட்டு இருப்பான், அவ்வளவு தான், வேற ஒன்னும் இருக்காது" என்று கூறிய வசந்தா, "யாரும் என் பையன தூக்கிட்டு போயிருக்க மாட்டாங்க" என்று தனக்கு தானே தைரியம் சொல்லிக்கொண்டாள்.

சீனுவை காணவில்லை என்ற செய்தி காட்டுத்தீயாய் அந்த அடுக்குமாடி குடியிருப்பு முழுவதும் பரவியது. பலரும் அவனை தேட உதவிக்கு வந்தனர். அவ்வாறே மூன்று மணி நேரமானது. எந்த முன்னேற்றமும் இல்லை. சீனுவின் தந்தை சில நண்பர்களுடன் வீடு திரும்பினான். அவனிடமும் எந்த நற்செய்தியும் இல்லை. அடையாளம் தெரியாத பைக்கைப் பற்றியும் அதில் இருந்த கருப்பு மூட்டையை பற்றியும் செக்யூரிட்டி சங்கரிடம் தெரிவித்தார். அவ்வளவு தான், அதை கேட்ட சங்கரின் நண்பர்களில் ஒருவன்,

"டேய், எனக்கென்னமோ, போலீஸ்ல ஒரு புகார் குடுத்திடலாம்னு தோணுதுடா" என்றான். ஏனைய நண்பர்களும் அதை ஆமோதிக்க,

"வசந்தா, நீ இன்னும் ஒரு தடவை அப்பார்ட்மெண்ட்ல நல்லா தேடு. நான் ஒரு கம்ப்லைன்ட் குடுத்துட்டு வர்றேன்" என்று சங்கர் கூறி கிளம்பிய நொடியே அதீத பீதி அவளை ஆட்கொண்டது. கண்கள் இருண்டு, உடலில் வலுவிழந்து, மயங்கி கீழை விழுந்தாள்.

ஒரு 15 நிமிட மயக்கத்திற்கு பிறகு கண் விழித்தாள். தான் அந்த அடுக்குமாடி குடியிருப்பின் கார் பார்க்கிங் திண்ணையில் படுத்திருப்பதை உணர்ந்தாள். தன்னைச் சுற்றி இருந்தவர்கள் முகத்தில் எந்த மலர்ச்சியும் இல்லை. காவல்துறையில் புகார் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய சங்கர்,

"போலீஸ்ல ஒரு ஏட்டை உடனே அனுப்பிச்சிருக்காங்க. அவர் அபார்ட்மெண்ட்ட நல்லா ஒரு தடவ தேடிட்டு, ரிப்போர்ட் பண்ண பிறகு, போலீஸ் ஒரு தனி டீம் போட்டு தேட ஆரமிப்பாங்களாம்" என்று தன் மனைவியிடம் விளக்கமளித்தான். சி.சி.டி.வி பைக்கை பற்றி கேட்டாள் வசந்தா. அந்த பைக் நம்பரை ட்ரேஸ் செய்து, அந்த முகவரிக்கு ஓர் ஆள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினான் சங்கர்.

"என்னமோ போங்க, நம்ம யாருக்கும் எந்த பாவமும் செய்யல. ஆனா நமக்கு மட்டும் ஏன் இப்படியெல்லாம் நடக்குதோ தெரியல" என்று நொந்துகொண்டாள் அவள். ஒரு சராசரியான இயல்பான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தனர். கொரோனா காரணமாக, சங்கருக்கு வேலை போனது. வேலையை நம்பி வாங்கிய வீட்டு கடனின் .எம். கட்ட முடியாமல் போக, சங்கருக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை உதவி செய்யலாம் என்று எண்ணி, காய்கறி கடையை துவங்கினாள் வசந்தா. இவ்வளவையும் தாங்கிய அவளால், சீனுவாசன் காணாமல் போனதை மட்டும் தாங்கமுடியவில்லை.

மேலோட்டமாக தேடிய ஏட்டு, செக்யூரிட்டியை பார்த்து, "இங்க ஏதாவது கன்ஸ்ட்ரக்ஷன் வேலை நடக்குதா?" என்று கேட்டார். "பெருசா ஒன்னும் இல்லை சார், ஒரு சின்ன வேல தான். பின்னாடி இருக்கிற தண்ணி தொட்டிக்கு ஒரு மூடி போடற வேலைதான். கம்பிகட்டி சிமெண்ட் போட்டாச்சு. தூக்கி மூடுறதுதான் பாக்கி" என்ற பதில் வந்ததும், தன் தொப்பையை பொருட்படுத்தாமல் அந்த தண்ணீர் தொட்டி இருக்கும் இடத்தை நோக்கி ஓடத் துவங்கினார் ஏட்டு. 'என்னது இன்னமும் மூடி போடலையா' என்று பதறியவாறு வசந்தாவும் சங்கரும் ஏட்டை பின்தொடர்ந்தனர். மூவரும் தொட்டியை அடைந்த நொடியே, நல்ல செய்தி காத்திருந்தது. ஆம், மயங்கிய நிலையில் தொட்டியின் அடியில் கிடந்தான் சீனு. ஆறு அடி ஆழம் கொண்ட தொட்டியை ஏணியின் உதவியுடன் கீழ் இறங்கி சீனுவை தோளில் தூக்கி மேலே வந்தான் சங்கர். சீனு மூச்சு விடுவதை பார்த்தவுடன் தான் வசந்தாவிற்கு மூச்சு வந்தது. அவசர சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டான். மண்டையிலும் முழங்கையிலும் நல்ல அடி. உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று 2 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டான்.

போலீஸ் புகார் வாபஸ் வாங்கப்பட்டது. அப்போது, அந்த மர்ம பைக் நபர் ஒரு 'பல நாள்' திருடன் என்று தெரியவந்ததாகவும், அவன் வீட்டில் பல கொள்ளை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் சங்கருக்கு தெரிவிக்கப்பட்டது.

அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு குரூப் மீட்டிங் போடப்பட்டு, தண்ணீர் தொட்டி மூடாததன் காரணம் ஆராயப்பட்டது. குழந்தை விழுந்த நாளன்று, வேலைக்கு வரவேண்டிய கொத்தனார் முத்து ஒரு சாலை விபத்தில் மாட்டிக்கொண்ட காரணத்தால் தொட்டியை மூட வேலைக்கு வர இயலவில்லை என்று தெரியவந்தது. உடனடியாக அதை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது."

இரண்டு நாட்களுக்கு பிறகு, அந்த கொத்தனார் முத்து கால்கள் தாங்கியபடி, 2 சித்தாட்களுடன் அபார்ட்மெண்ட்டை அடைந்தார். தொட்டியை மூட அவர்களை பணித்துவிட்டு, நுழைவாயிலுக்குச் சென்று செக்யூரிட்டியிடம் பேச்சு கொடுத்தார். அப்போது அங்கு வந்த வசந்தா கொத்தனாரை கடிந்து பேசத் துவங்கினாள்.

"நீங்க மட்டும் அன்னிக்கி ஒழுங்கா வேலைக்கு வந்திருந்தீங்கன்னா, என் பையனுக்கு இப்படி நடந்திருக்காது. இனிமேலாவது, பைக்கை பொறுமையாக ஓட்டுங்க..." என்றாள். அந்த தாயின் மனவலியை பொறுத்து கொண்டு, "சரிம்மா, நீங்க சொல்றதும் சரிதான். ஆனா, அன்னிக்கி என்ன ஆச்சுன்னா, நம்ம வீட்டுக்கு வேலைக்கு பைக்ல வரும்பொழுது திடீர்னு ஒரு மாடு வந்து என்னைய மோதிடிச்சு." என்ற முத்துவின் வார்த்தைகள், வசந்தாவிற்கு "ஞால ஞதியை" (உலக நியதியை) உணர்த்தியது. எங்கோ தெரியாமல் நாம் செய்யும் நல்ல வினையோ, கெட்ட வினையோ, இரண்டும் நம்மை விடாது. அன்று மாட்டை விரட்டவில்லையென்றால், தொட்டி மூடப்பட்டிருக்கும், குழந்தை சீனுவும் விழுந்திருக்க மாட்டான். தன் நிலைக்கு தானே ஒரு மறைமுக காரணம் என்று உணர்ந்த வசந்தா, அன்றிலிருந்து ஒவ்வொரு செயலையும் விளைவறிந்து செய்யத் துவங்கினாள். தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பதே ஞால ஞதி

[ * * * முற்றும் * * * ]

ஞால ஞதி - சிறுகதை - விஜய் பீமநாதன்.

  தனது காய்கறி கடையில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்தும் , அதை பெரிதும் பொருட்படுத்தாமல் , ஒரு நீட்டு கம்பை தேடிக்கொண்டிருந்தாள் நட...