Saturday 12 September 2020

மலரா நினைவு...................மர்ம சிறுகதை - விஜய் பீமநாதன் (Malaraa Ninaivu - Tamil Thriller Short story by Vijay Beemanadan)

"டக்...... டக்...... டக்...... டக்......" என்ற பூட்ஸ் சத்தம் இளங்கோவின் தூக்கத்தைக் கலைத்தது. கண்களை திறந்து அந்த சத்தம் நிஜமா அல்லது கனவா என்று உறுதி செய்து கொண்டான். இந்த நள்ளிரவில் யாராக இருக்கும் என்ற கேள்வியுடன், தன் வலதுபுறம் தூங்கும் மனைவியை எழுப்பாமல், படுக்கையில் படுத்தவாறே இடது பக்கம் கையை நீட்டி மேஜை டிராயாரை திறந்து டார்ச்சையும் சிறுக் கத்தியையும் எடுத்துகொண்டு எழுந்தான். இப்போது பூட்ஸ் சத்தம் கேட்கவில்லை. தன் படுக்கை அறை கதவின் கைபிடியை சத்தமின்றி திறந்து ஹாலுக்கு வந்தான். சோபாவின் பின்னால் யாரேனும் உள்ளார்களா என எட்டிப்பார்த்தான். யாரும் இருப்பதாக தெரியவில்லை. இடது கையிலே டார்ச், வலது கையிலே கத்தி. வீடு முழுவதும் தேடிப் பார்த்தான். தொலைவில் நாய்கள் குறைக்கும் சத்தம் கேட்டது. உடனே வெளியே சென்றான். சாலையிலும் ஆள் நடமாட்டமே இல்லை. சாலையின் இருபக்கமும் வாகனங்கள் நின்றிருந்தன. அந்த சாலையின் முனை வரை சென்று, சுற்றி நோட்டம் விட்டான். யாரும் இல்லை என்பதால், திரும்பி தன் வீட்டை நோக்கி நடந்தான். அப்போது அவன் வீட்டின் சுற்றுசுவரின் இரும்பு கதவு திடீரென திறந்தது. உள்ளிருந்து ஒரு உருவம் அதிவேகமாக வெளியே வந்தது. அதை பார்த்த இளங்கோ, அதிர்ந்து போய் அந்த உருவத்தை நோக்கி ஓட்டமெடுத்தான். அந்த உருவமோ மிக வேகமாக ஓடியது. சிறுது தூரம் துரத்திக்கொண்டு ஓடியும் பிடிக்க முடியவில்லை. அந்த இடத்திலே, இரண்டு நிமிடங்கள் மூச்சு வாங்கி விட்டு வீடு திரும்பினான். மீண்டும் வீட்டை ஒரு முறை சோதனை செய்தான். ஏதேனும் வீட்டில் திருடு போனதா என்ற கோணத்திலும் பார்த்தான். ஆனால் எந்த மாற்றமும் இல்லை. தன் படுக்கையில் படுத்து, யாராக இருக்கும் என வெகு நேரம் யோசித்தும் பதிலின்றி உறங்கினான்.

அப்பா பிள்ளையாரப்பா....!! என் பையன் இளங்கோவுக்கு நல்ல புத்திய குடுப்பா....!! அவன் சீக்கிரம் திருந்தணும்....!! என்று நாள் தவறாமல் வேண்டும் மரகதம், அன்றும் கடவுளை வேண்டினாள்.

" ஏன்டா இளங்கோ.....?? மணி காலேல 11.... எழுந்திரு.....!!"

" என்னமா நீ... ஒரு நாள் கூட என்ன தூங்க விடமாட்ர....!!"

" கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆகுது, உன் பொண்டாட்டியை எங்கயாவது வெளில கூட்டிகிட்டு போலாம்ல...!!"

" காலேலையே கரிச்சு கொட்ட ஆரம்பிச்சுட்டியா....??"

" உன் பழய வேலைய விட்டு நின்னு அஞ்சு வருஷமாச்சு.. நீ ஒழுங்கா இருந்து, வேல வெட்டிக்கு போனா, உன்ன ஏன்டா நான் திட்ட போறேன்....!!"

" நான் வேலைக்கு போறேன் போகல, அது ரெண்டாவது. தேவயான காசு, வசதி... எல்லாம் இருக்குல்ல... அப்புறம் எதுக்கு சும்மா நைநைனு எதாவது என்ன சொல்லிக்கிட்டு...!?!?"

" காசு வசதி எல்லாம் இருக்குடா... ஆனா நிம்மதி இல்ல....!! ஏதோ ரியல் எஸ்டேட்ன்னு சொல்ற. ஆனா ஒரு நிரந்தரமான வேலைக்கு போமாட்ர. பாத்தா உங்கிட்ட நல்லா பணம் புழங்குது... எப்படின்னு கேட்டா சொல்ல மாட்ர...!!

" அம்மா.... போயி வேற ஏதாவது வேல இருந்தா பாரு... சும்மா இதையே கேட்டுகிட்டு....!!"

" ஒரு கல்யாணம் பண்ணி வச்சாதான் அடங்குவான்னு நெனச்சேன், ஹ்ம்ம்... பொருத்திருந்து தான் பாக்கணும்..." என்று மனதில் எண்ணிக்கொண்டே தன் வீட்டு வேலைகளை தொடர்ந்தாள். அன்று மாலை தன் தாய் கேட்ட கஸ்தூரி மஞ்சள் வாங்க அருகில் இருந்த நாட்டு மருந்து கடைக்கு சென்றான் இளங்கோ. அந்த கடையை ஒட்டி ஒரு சித்த மருத்துவசாலை இருந்தது. அங்கு ஒரு ஆள் அந்த மருத்துவருடன் ஏதோ உரையாடிக்கொண்டிருந்தான். அதை தற்செயலாக, கடையின் வெளியில் நின்றபடியே கவனித்தான் இளங்கோ.

" நீங்க இத நெறயாலாம் சாப்ட கூடாது. வாரம் ஒரு முறை, கால் கிராம், பால்லையோ, இல்ல தேன்லையோ கலந்து சாப்பிடணும். இப்படியே, ரெண்டு வருஷம் சாப்டீங்கன்னா, உங்களுக்கே நல்ல வித்யாசம் தெரியும்.."

" என்ன டாக்டர், ரெண்டு வருஷமா....!! ரொம்ப அதிகம்.... நான் சீக்கிரமா வெள்ளை ஆகணும்.... அப்பத்தான் எனக்கு கல்யாணம் நடக்கும். எல்லா பொண்ணுங்களும், என்ன கருப்பு கருப்புன்னு ரிஜெச்ட் பண்றாங்க..!!"

" அதுக்காக அப்படியெல்லாம் பண்ண முடியாது குணசேகரன்... நீங்க இத நெறய சாப்டீங்க, உங்களுக்கு குழந்தை பிறக்காது........ உங்க கிட்னியும் செயலிழந்திடும்.....!! நான் சொல்ற படி கேளுங்க"

" சரி டாக்டர்.... இந்த டப்பால எவ்ளோ கிராம் இருக்கு...??"

" இதுல 10 கிராம் தங்க பஸ்பம் இருக்கு...!! ஆனா ரொம்ப காஸ்ட்லி.... ஒரு கிராம் 5000  ரூபாய்...!!"

" எனக்கு காசுலாம் மேட்டேரே இல்ல டாக்டர்..... எங்க ஸ்வைப் பண்ணனும்...!!"

குணசேகரன் தங்க பஸ்பத்தை வாங்கிக்கொண்டு வெளியே வரும் போது தன் முகத்தை வேறு திசையில் திருப்பிக்கொண்டான் இளங்கோ. ஒரு வசதியான காரில் ஏறி புறப்பட்டான் குணசேகரன். வந்த வேலையை மறந்து, தன் பைக்கில் ஏறி குணசேகரனை பின் தொடர்ந்தான். குணசேகரனின் வீட்டு விலாசத்தை குறித்து கொண்டான். அன்றிலிருந்து நான்கு நாட்கள் குணசேகரனின் நடவடிக்கைகளை கவனித்தான். வாடிக்கையாக செல்லும் இடங்கள், செய்யும் காரியங்கள் என அனைத்தையும் தெரிந்துகொண்டான் இளங்கோ. மறுநாள் மாலை, குணசேகரன் தன் வீட்டருகில் இருக்கும் பிள்ளையார் கோவிலுக்கு சென்று வணகிவிட்டு சன்னதியில் அமர்ந்திருந்தான். ஒன்றும் தெரியாதது போல் அவனருகில் உட்கார்ந்தான் இளங்கோ. தன் கைபேசியை எடுத்து பேசத் தொடங்கினான்.

" ஹலோ, சொல்லுங்க... உங்க குரல கண்டுபிடிக்காமலா...?"

" ........................................................"

" நான் தான் அப்பவே சொன்னேனே... எனக்கு தெரியும் சார்... இன்னும் மூனே வாரம், சும்மா தக தகன்னு மின்னுவீங்க. பாருங்க.!!"

" ........................................................."

" நான் இல்லாமலா, நிச்சியமா வருவேன்.. ...!!" " இன்னூரு விஷயம்...நான் முன்னாடியே கேட்ட மாதிரி, உங்க போட்டோவ எனக்கு வாட்ஸ்அப் பண்ணுங்க. என் மத்த கிலென்ட்ஸ் கிட்ட காட்ட ஹெல்ப்பா இருக்கும்....!!"

" ........................................................."

" ஓகே, சார்....... நம்ம அடுத்த வாரம் பாப்போம்....!" என்று கூறி அலைபேசி உரையாடலை முடித்து, அருகில் இருந்த குணசேகரனை பார்த்து புன்னகித்தான் இளங்கோ.

" ஹலோ சார், வணக்கம். நீங்க பேசிகிட்டிருந்தது எனக்கு தற்செயலா கேட்டுது. நீங்க போன்ல ஏதோ ஸ்கின் கலர பத்தி பேசினிங்கன்னு நெனக்கிறேன். நீங்க தப்பா நெனக்கலனா, அத பத்தி எனக்கு கொஞ்சம் சொல்ல முடியுமா....?!?!"

" தாராளமா சொல்லலாமே.... அதுக்கு முன்னாடி, நான் "கார்த்திக்" ரியல் எஸ்டேட் ப்ரோக்கர்...! நீங்க.....??"

" என் பேரு குணசேகரன். துபாய்ல வேல பாக்குறேன். லீவ்' வந்திருக்கேன்.....!!"

" ஹ்ம்ம்....!!"

" கார்த்திக், அந்த ஸ்கின் மேட்டர் என்னன்னு கொஞ்சம் சொல்லுகளேன், அத தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்..!!"

" சொல்றேன்...என் தாத்தாவுக்கு தாத்தா, ஒரு பெரிய சித்த வைத்தியர். அவர் எழுதி வச்சிட்டு போன பல சித்த வைத்திய குறிப்புகள் இருக்கு. அதுல ஒன்னு தான் இந்த கலர் மேட்டர்... அத நான் வாயால சொன்ன நீங்க நம்ப மாட்டீங்க...!! ஆனா, நீங்க அந்த டெச்னிக்க ட்ரை பண்ணா, 90 நாள்ல நீங்க அஜீத் கலர்க்கு வந்திடுவீங்க..."

" அஜீத்லாம் வேணாம் சார்... ஏதோ சுமாரான கலர் வந்தா போதும்...!!"

" நான் உங்களுக்கு ஒரு டெமோ காட்றேன். அத பாத்திட்டு, நீங்க அத வாங்கலாமா வேண்டாமான்னு முடிவு பண்ணுங்க. இதுல ஒரு பிளஸ் பாயிண்ட் இருக்கு. சைடு எபக்டே கிடையாது.... ஆனா செலவு அதிகமாகும்!!"

செலவ பத்தி விடுங்க கார்த்திக். டெமோ எப்போ, எங்க வரணும்... ??"

" ஹ்ம்ம், நாளைக்கு இதே எடத்துக்கு, சரியா மதியம் ஒரு மணிக்கு வாங்க...!!"

" ஓகே கார்த்திக்.. இந்தாங்க என் கார்ட்... நாளைக்கு மீட் பண்ணலாம்...!!" என்று கூறி விடை பெற்றான் குணசேகரன்.

தான் திட்டம் தீட்டியது போல், அனைத்தும் சரியாக நடப்பதை எண்ணி பேருமூச்சு விட்டுக்கொண்டான் இளங்கோ. ஆனாலும் முந்திய வாரம் தன் வீட்டிற்கு வந்தது யார் என்ற கேள்வி அவனை சுற்றிச் சுற்றி வந்த வண்ணம் இருந்தது. உடனே வீடு திரும்பிய இளங்கோ, பின்புறம் இருக்கும் கேரேஜிக்கு சென்றான். உள்ளே நுழைவதற்கு முன்பு, தன்னைச் சுற்றி யாரேனும் உள்ளார்களா என்று நோட்டம் விட்டபடியே உள்ளே சென்றான். இருண்டிருந்த கேரேஜிக்கு வெளிச்சம் கொடுத்து, பரண் மேலிருக்கும் சில பொருட்களை எடுத்து கீழே வைத்தான். பின்பு, கவனமாக தன் இரட்டை குழல் வேட்டைத் துப்பாக்கியை எடுத்து தூசு தட்டி துடைத்தான். தோட்டாப் பெட்டியை எடுத்து, சரிப்பார்த்து தோட்டக்களை துப்பாக்கியில் ஏற்றினான். அருகில் இருந்த ஒரு அழுக்கு கோணியால் அந்த துப்பாக்கியை சுற்றி, தன் முதுகில் மாட்டும் பையில் வைத்து வெளியே சென்றான்.

மறுநாள் மதியம் ஒரு மணி அளவில், இளங்கோவை பார்க்க குணசேகரன் வந்தான்.

" வாங்க குணசேகரன், சொன்ன மாதிரியே சரியான டைம்க்கு வந்துட்டீங்க...!!"

" ஆமாம் கார்த்திக். வாங்க கெளம்பலாம்...!!

" இருங்க... நான் போயி என் பைக்க எடுத்திட்டு வர்றேன்...!!"

" நோ நோ.... நம்ம கார்லயே போலாம்....!!"

சில வினாடிகள் யோசித்த இளங்கோ, " சரி, ஓகே.... உங்க கார்லயே வர்றேன்...!!"

இருவரும் காரில் ஏறி, புறப்பட்டனர். இளங்கோ வழிகாட்ட, குணசேகரன் காரை ஓட்டினான். பரப்பரப்பான நகரத்தை கடந்து, ஒதுக்குபுறமாக இருக்கும் பகுதியை நுழைந்தனர். சாலையின் இருபுறமும் காய்ந்த வயற்காடு, அவ்வளவாக வாகன போக்குவரத்து இல்லை, இங்குமங்குமாய் ஓரிரு குடிசைகள் இருந்தன. குணசேகரனுக்கு தான் செய்துகொண்டிருப்பது சரிதான என்ற கேள்வி எழுந்தது. முன்பின் தெரியாத ஒருவருடன், என்ன செய்ய போகிறோம் என்று தெரியாமல் வருவது சரிதான என்று எண்ணியபடியே,

" என்ன கார்த்திக்..... இன்னு எவ்ளோ தூரம் போகணும்...!!"

" இன்னு கொஞ்ச தூரம்.... இன்னும் பத்து நிமுஷத்துல போயிடலாம்...!!"

" ஹோ... ஓகே... அது என்ன டெக்னிக்னு சொல்லுகளேன்....!!"

" ஆக்க பொறுத்தவருக்கு, ஆற  பொறுக்கணும்..... பத்து நிமுஷத்துல நீங்களே தெரிஞ்சுப்பீங்க...!! என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, அந்த காரின் பின்னால் வரும் பைக் ஒன்று நீண்ட நேரமாக பின்தொடர்வதை கவனித்தான் இளங்கோ. திடீரென,

" குணசேகரன், இந்த லெப்ட்.... இந்த லெப்ட் தான்... திருப்புங்க....!!"

" இவ்ளோ டக்னு சொல்றீங்க.... இருங்க ரிவர்ஸ் எடுத்து போகலாம்..!!"

குணசேகரன் காரை பின்னாடி எடுக்கும் போது, பின்தொடர்வதாக சந்தேகித்த பைக்கை கவனித்தான் இளங்கோ. ஆனால், அந்த பைக் வேகத்தை குறைக்கவில்லை. கார் பின்னாடி வந்து, இடது பக்கம் திரும்புவதற்குள் அந்த பைக் அவர்களை கடந்து சென்றது. தலை கவசம் அறிந்திருந்ததால், யார் அந்த பைக்கை ஓட்டியதென்று இளங்கோவிற்கு தெரியவில்லை.

" சாரி குணசேகரன், இந்த லேபிட் இல்லை.. தப்பா சொல்லிட்டேன்... அடுத்த லேபிட்...!!"

" ஹோ..... இட்ஸ் ஓகே.....!!"

ஓரிரு கிலோமீட்டர் தாண்ட, அடுத்த இடது குறுக்கு பாதை வந்தது. இளங்கோ கூறியதுபோல், அதில் திருப்பினர். சுமாராக ஒரு கிலோமீட்டர் அந்த பாதையிலே சென்றனர்.

" குணசேகரன், இதோ இந்த குடுசைக்கு பக்கத்துல வண்டிய நிருந்துங்க....!!"

வண்டி நின்ற சத்தத்தைக் கேட்டு ஒரு கிழவர் குடிசையை விட்டு வெளியே வந்தார்.

" வாங்க வாங்க.... உங்களுக்காத தான் காத்துகிட்டு இருந்தேன்... உள்ள வாங்க....!!"

இருவரும் காரை விட்டு இறங்கினர். அந்த கிழவரை பார்த்த குணசேகரன், ஆச்சர்யப் பட்டான்.

" என்ன இந்த தாத்தா இவ்ளோ வெள்ளையா இருக்காரு...!!"

" இந்த இடத்தோட மகிமை அதுதான்... மொதல்ல உள்ள போயி மோர் சாப்டுட்டு, நம்ம டெமோ பாக்க போகலாம்...!!" உள்ளே சென்று அந்த கிழவர் குடுத்த மோரை குடித்தவுடன், இளங்கோ அருகில் இருக்கும் ஒரு கிணற்றை பார்க்க அழைத்து சென்றான்.

" இதான் குணசேகரன், நான் சொன்ன இடம்...!!"

" என்னது, கெணரா...." எற்று கூறியபடியே எட்டிப்பார்த்து, " என்ன கார்த்திக், உள்ள தண்ணி கூட இல்லை..!!"

" வாங்க, கெணத்துக்கு உள்ளே இறங்குவோம்....!!"

" உள்ளயா.... எதுக்கு....??"

" சார், நீங்களும் அந்த தாத்தா மாதிரி அப்டியே ஜொளிக்கணுமா வேண்டாமா...??"

" ஆமாம், ஜொளிக்கணும்.....!!"

" அப்ப, பேசாம நான் சொல்றத கேளுங்க....!!" என்று சமாளித்து உள்ளே அழைத்து சென்றான் இளங்கோ. சுமார் 50 அடி ஆழம், மேலிருந்து 10 அடி கீழே வரைக்கும், பல வருடங்களுக்கு முன்பு சுண்ணாம்பு பூசிய உட்சுவர், அதன் கீழே முழுவதும் பாறைகள். இறங்க உதவியாக, அந்த கிணற்றின் சுற்றுச்சுவரில் படிக்கட்டுகள் அமைந்திருந்தன. மிக பொறுமையாகவும், கவனமாகவும் சுவரை பிடித்தவாறு கீழே இறங்கினர்.

" அப்பாடா..... ஒரு வழியா வந்தாச்சு. இப்ப நான் சொல்ல போறதா கவனமா கேளுங்க. இந்த கெணத்து தண்ணிய மூணு மாசம் யூஸ் பண்ணா, நீங்க சும்மா தக தகன்னு மின்னுவீங்க..!!"

" என்ன.... காதுல பூ சுத்துறீங்களா...?? தங்க பஸ்பம் சாப்டலே பல வருஷமாகும்... போயும் போயும் இந்த கெணத்து தண்ணியவா.."

" நான் முன்னாடியே சொன்னேன்.... நீங்க நம்பமாட்டீங்கன்னு..... சரி.... இன்னூரு ரகசியத்த சொல்றேன்... இந்த பாறைங்க, சாதாரண பாறைங்க இல்ல. தங்க பாறைங்க.....!!"

" இது ஒன்னும் சரியா வராது.. என் மேல தப்பு... உங்க பேச்ச கேட்டு இவ்ளோ தூரம் வந்தது என் மேல தப்பு...!!"

" நம்பாத உங்கள என்ன செய்யலாம்.....!!" என்ற குணசேகரனுடன் பேசியவாறே மேலே பார்த்து அந்த தாத்தாவை அழைத்தான்.

" அண்ணே...!!! அண்ணே...!!! கருப்பண்ணே......!!! கொஞ்சம் இங்க வாங்களேன்....!!" என்ற சொற்களின் எதிரொலியை கேட்டு, எட்டிப் பார்த்தார் அந்த கிழவர்.

" சொல்லுங்க.... என்ன வேணும்.....!!"

" இவர நம்பவக்க வேண்டிய நேரம் வந்துடிச்சு... போயி அந்த கோணிப்பை சாமான எடுத்துட்டு வாங்க...!!"

'கோணிப் பைக்குள் என்ன இருக்கு, அதை வைத்து என்ன செய்ய போகிறான்' என்று குணசேகரனின் மனம் பதபதைத்தது. அந்த கிழவர், இளங்கோ கேட்டதை தூக்கிப் போட்டார். அதைப் பிடித்து, பிரித்த நொடியே,

" ஐயய்யோ.... துப்பாக்கியா..... என்ன காப்பாத்துங்க, என்ன காப்பாத்துங்க...!!" என்று அலறத் தொடங்கினான் குணசேகரன்.

" இந்த பாறைங்க, தங்க  பாறைங்கன்னு ஒத்துக்கோங்க.... இல்ல, சுட்டுடுவேன்.....!!"

இரு கைகளையும் மேலே தூக்கிய வாறு, நடுங்கிய குரலில், " ஒத்துக்கணுமா... சரி சரி..... இது தங்க கல்லுதான்... ஒத்துகறேன்... என்ன சுட்டுடாதீங்க ப்ளீஸ்....!!"

" ஹா....., ஹா....., ஹா.....!!" என்று சிரித்தவாறே துப்பாகியால் சுட்டான் இளங்கோ. டமால் என்ற சத்தத்துடன் கீழே விழுந்தான் குணசேகரன். ஒரு நிமிடம் மயான அமைதி. கீழே கிடந்த குணசேகரன், கண்களை திறந்து பார்த்தான். தன் உடலில் ரத்தக்காயம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தான். ஒன்றும் புரியாமல், இளங்கோவைப் பார்த்தான்.

" என்ன குணாசேகரன், பயந்துடீங்களா.... கொஞ்சம் திரும்பி பாருங்க....!!"

திரும்பி பார்த்தவுடன் வியந்து போனான் குணசேகரன். இளங்கோ சுட்டது, தன்னை நோக்கி அல்ல, ஒரு பாறையை நோக்கி, என்பது புரியவந்தது. சுடப்பட்ட பாறை மூன்றாக பிளந்து, தங்கத் தூளை கக்கியிருந்தது . அவனால் அவன் கண்களையே நம்ம முடியவில்லை. இளங்கோ சொன்னது உண்மைதானோ என்று தோன்றியது. அருகில் சென்று, தொட்டுப்பார்த்தான்.

" என்ன ஒரு அதிசயம்.....?? தங்கம் மாதிரி இருக்கு....!!"

" தங்கம் மாதிரி இல்லை சார்.... ஒரிஜினல் தங்கம்.....!! இன்னும் நம்பிக்கை இல்லைனா... வேற ஒரு பாறைய நீங்களே சுடுங்க.... இந்தாங்கா....!!" கையில் துப்பாக்கியை வாங்கி, பெரிய பாறையாகப் பார்த்து, சற்று அருகில் சென்று சுட்டான். அந்த பாறையும் பிளந்து தங்கத் தூளை கக்கியது.

" இதுக்கு மேலையும் நம்பிக்கை வரலேன்னா, நீங்க இத டெஸ்ட் பண்ணி பாத்துக்கோங்க....!! அதுவும்……….. உங்களுக்கு தெரிஞ்ச கடைல.....!!"

தன் சட்டப் பையிலிருந்து, ஒரு காகிதத்தை எடுத்து, கீழே சிதறி கிடக்கும் தங்கத்தை அதில் வைத்து மடித்தான்.

" கல்லுக்குள் ஈரம், கேள்வி பட்டுருக்கேன். ஆனா, கல்லுக்குள் தங்கம், இப்ப தான் கேள்வி படுறேன்...!!"

" ஹ்ம்ம்... இந்த கெணத்துல நீஙக தண்ணிய நெரப்பி, மூணு மாசம் குளிக்க, குடிக்க, சமைக்க யூஸ் பண்ணா போதும். உங்களுக்கே வித்யாசம் தெரியும்... அப்புறம் பாருங்க, எல்லாம் பொண்ணுங்களும் நீ நான்னு போட்டி போடும்.!!" ஒன்றும் பேசாமல் நின்றான் குணசேகரன்.

" சரி.... டெமோவ பத்தாச்சு... கெணத்த வாடகைக்கு எடுத்துகிறீங்களா...?"

" எவ்ளோ வாடகை...??"

" கம்மி தான். மாசத்துக்கு நாலு லட்சம், மூணு மாசமா எடுத்தா பத்து லட்சம்...!!"

" பத்து லட்சமா..... ரொம்ப அதிகம்.... அவ்ளோ கட்டுபடி ஆகாது.....!!"

" ஒரு கிராம் தங்க பஸ்பம் 5000 ரூபாய், நீங்க நூறு கிராம் சாப்ட்டாலே 5 லட்சம் செலவாகும். நெரயாவும் சாப்ட கூடாது, அப்டி பண்ணா சைடு எபக்ட்ஸ் வேற.. ஆனா இந்த கெணத்து தண்ணிய யூஸ் பண்ணா சைடு எபக்ட்ஸே கிடையாது.. இன்னூரு பிளஸ் பாயிண்ட், ஒரு வேள, நீங்க நல்ல கலர் ஆகலீன்னா, 100 % கேஷ்பேக்... உங்களுக்கு ஓகேன்னா அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்... என்ன சொல்றீங்க.!!"

" கொஞ்சம் பாத்து பண்ணுங்க கார்த்திக்.....!!"

" சரி, உங்களுக்காக 50,000 ரூபாய் கோறச்சுகிறேன்...!!"

" உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம், மூணு மாசம்  9 லட்சம்.... டீல்..!!"

" ஹ்ம்ம்.... ஆனா ஒரு கண்டீஷன், இதப்பத்தி நீங்க வெளிய சொல்லக்கூடாது. இத வச்சு நீங்க சைடு பிசினஸ் எதுவும் பண்ணக்கூடாது... ஓகேவா ..!!

" ஓகே கார்த்திக். ஆனா என் மன திருப்திக்கு, இத நான் டெஸ்ட் பண்ணிட்டு, அப்புறம் நம்ம அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்...!!

இருவரும் உரையாடியவாறே கிணற்றை விட்டு வெளியே வந்து, காரில் ஏறி புறப்பட்டனர். அதே பிள்ளையார் கோவிலிலே தன்னை இறக்கிவிடுமாறு கேட்டுக்கொண்டான் இளங்கோ.

மறுநாள் மாலை, குணசேகரன் இளங்கோவை அலைபேசியில் அழைத்தான்.

" ஹலோ கார்த்திக்... நான் தான் குணா பேசுறேன். டெஸ்டிங் ஓகே. அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்....!!"

" ஹ்ம்ம்¨... நேத்து நைட்டே நான் ரெடி பண்ணிட்டேன். நீங்க கேஷோட வாங்க, சைன் பண்ணுங்க, தக தகன்னு மின்னுங்க,,,,!!" இளங்கோ வரச்சொன்ன இடத்திற்கு வந்து, தான் ஏமாற்ற படுகிறோம் என்பது தெரியாமல், ஒன்பது லட்ச ரூபாயை கொடுத்து, ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்திட்டான் குணசேகரன். "ஒரு பத்து நாளாவது கொஞ்சம் உள்ளூர்ல தல காட்ட கூடாது, எங்கயாது வெளியூர் போயிடணும்" என்று எண்ணிக்கொண்டே வீடு திரும்பிய இளங்கோ, நேராக கேரெஜிற்கு சென்று பணத்தை மறைத்து வைத்துவிட்டு வெளியே வந்து கதவைப் பூட்டினான். திரும்பிய போது, திடுக்கிட்டு போனான். அவன் முன், அவனது மனைவி நின்றிருந்தாள். தான் உள்ளே பணத்தை மறைத்ததை அவள் பார்த்திருப்பாளோ என்று ஐய்யப்பட்டான்.

"என்ன மாலினி, நீ இங்க என்ன பண்ற.....??"

"ஒன்னும் இல்லீங்க, உங்க கிட்ட ஒரு விஷயம் பேசணும்....!!"

"என்ன விஷயம், அத வீட்டுக்குள்ளயே சொல்றது.... இங்க எதுக்கு வந்த...?"

"உள்ள அத்த இருக்காங்க, அதான் இங்கே வந்தேன்...!!"

"சரி, என்னனு சொல்லு...!!"

"நம்ம கல்யாணத்துக்கு வந்த கிஃப்ட்ஸ்', ஒரு ஹனிமூன் டூர் பேக்கஜ் கிஃப்ட்டா வந்துருக்கு... உங்களுக்கு ஓக்கேன்னா, நம்ம....!! என்று வார்த்தைகளை மென்றாள்.

"ஆஹா, பழம் நழுவி பால்ல விழுது." என்று மனதில் எண்ணியவாறே, "எந்த ஊர்...??"

"மூனார்'ங்க..... நாளெலேர்ந்து 10 நாளைக்கு.....!!"

"சரி, இன்னிக்கி நைட்டே கெளம்பறோம், 10 நாளும் என்ஜாய் பண்றோம்..!!

"ச்சி.. போங்க.....!!" என்று வெட்கத்துடன் வீட்டிற்குள் ஓடினாள். தன் அத்தையிடம் நடந்ததை கூறி, பயணத்திற்கு தேவையானவற்றை எடுத்துவைக்க சென்றாள் மாலினி. அன்று இரவே மூனார்க்கு புறப்பட்டனர். கருத்த மேகங்களும், ஈரம் கலந்த காற்றும், பச்சை மலைகளும், அந்த புதுமண தம்பதியை ரம்மியமாய் வரவேற்றது மூனார். முன்பதிவு செய்யப்பட்ட ஹோட்டலில், செக்-இன் செய்தனர். சற்று நேரம் இளைப்பாறி, பின்னர் வெளியே சுற்றிப்பார்க்க சென்றனர்.

"என்னங்க, உங்களோடு மனசு விட்டு பேசி, உங்கள நல்லா புரிஞ்சிக்கத்தாங்க இந்த டூர்..!!"

"ஹ்ம்ம்ம்......."

"எனக்கு இருக்குற ஒரே ஆதரவு நீங்க தாங்க.....!!"

"ஹ்ம்ம்ம்......."

"என்ன இத்தன வருஷம், வளத்து ஆளாக்கிய என் அப்பா, நம்ம கல்யாணத்துக்கு இல்லையேன்னு தான் எனக்கு ரொம்ப வருத்தம்.....!"

"ஹ்ம்ம்ம்......." என்று வேறெதுவும் பேசாமல் தலையாட்டி தன் மனைவி பேசுவதை கேட்டான். அவ்வாறே அன்று பொழுது சாய, இருவரும் தங்கள் பெயரில் முன்பதிவு செய்யப்பட்ட போட் ஹவுஸ்க்கு சென்றனர்.

படுக்கையில் படுத்திருக்க,

"என்ன ஆச்சுங்க..... நா நெறய பேசினேன்.... ஆனா நீங்க ஒண்ணுமே பேசலையே.... என் மேல ஏதாச்சும் கோவமா.....??"

"அதெல்லாம் ஒன்னும் இல்ல.... ஆனா எனக்கு ஒரு சந்தேகம்....??"

"அப்பாடா இப்பவாது பேசினீங்களே, நல்லதா போச்சு, சரி சொல்லுங்க என்ன சந்தேகம்....??"

"இவ்ளோ செலவு பண்ணி, 10 நாள் ஹனிமூன் டூர பரிசா தர்ற அளவுக்கு இருக்குற உன் ஃபிரென்டு யாரு...?"

"என்னங்க சொல்றீங்க..... நான் பரிச குடுத்தது உங்க ஃபிரென்டுன்னு தான் நெனச்சுக்கிட்டு இருக்கேன்....??"

"என்னது................. என் ஃபிரென்டா.....?? அப்டிலாம் யாரும் இல்ல.......!!"

"அப்ப யாருங்க இத நமக்கு குடுத்தது.....??"

"அது தான் எனக்கும் புரியமாட்டுது....!! என் மேல தப்பு, உன்கிட்ட என்ன ஏதுன்னு விஜாரிக்காம கெளம்புனது என் மேல தப்பு" என்று இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது, இளங்கோவின் கைபேசி ஒலித்தது. இந்த நள்ளிரவில் தன்னை அழைப்பது யார் என்று கைபேசியை எடுத்துப் பார்த்தான்.

"கால் பிரம் அன்னோன்" என்று இருந்தது. எடுத்துப் பேசினான்.

"ஹலோ, யாரு பேசுறது...!!"

"ஹாய் மிஸ்டர்.இளங்கோ....!! என்ன எல்லாம் வசதியா இருக்கா...??"

"நீங்க யாருங்க பேசுறது.... அத முன்னாடி சொல்லுங்க.....!!"

"சொல்றேன், சொல்றேன். அத சொல்லத் தான போனே பண்ணுனேன்..... ஆனா ஒரு சின்ன கேம் ஆடுன அப்புறம் தான் என் பேரை சொல்லுவேன்...!!"

பதிலேதும் பேசாமல், அழைப்பை துண்டித்தான் இளங்கோ. மீண்டும் அவனது கைபேசி ஒலித்தது. இந்த முறை நன்றாக திட்டி வைத்து விட வேண்டும் என்று முடிவு செய்து, அழைப்பை எடுத்தான்.

"யாருடா நீ, இந்த நடு ராத்திரில போன் பண்ணி தொந்தரவு பண்ற....!!"

"டென்ஷன் ஆகாதீங்க மிஸ்டர்.இளங்கோ. நான் கேம் ரூல்ஸ்ஸ சொல்லறத்துக்குள்ள நீங்க வச்சுட்டீங்க. ஒரே ஒரு ரூல் தான். என்னோட அனுமதி இல்லாமா போன கட் பண்ணினீங்கன்னா, உங்க அகௌண்ட்லேர்ந்து 10 லட்சம் குறஞ்சிடும்....!!"

"என்னடா, என்ன கதை விடுறியா....!!"

"நீங்க நம்ப மாட்டீங்கன்னு தெரியும். லாஸ்ட் டைம் என்ன கேக்காம கட் பண்ணதுக்கு பெனால்ட்டி. 1 லட்சம் உங்க அகௌண்ட்லேர்ந்து இப்போ எடுக்குறேன். உங்களுக்கு மெஸ்ஸஜ் வரும்....!!"

"ஒழுங்கா நீ யாருன்னு சொல்லிடு, இல்லன்னா நடுக்குறதே வேற...!!" என்று இளங்கோ திட்டிக்கொண்டிருக்கும் போது, ஒரு மெஸ்ஸஜ் வந்தது. எடுத்து பார்த்து அரண்டு போனான். ஒரு லட்சம் டெபிட் ஆனதற்கான மெஸ்ஸஜ் அது.

"டேய்..... எப்டிடா ஒரு லட்சம் என் அகௌண்ட்லேர்ந்து எடுத்த.....?? ஒழுங்கு மரியாதயா திருப்பி போட்ரு..!"

"மிஸ்டர்.இளங்கோ, டென்ஷன் ஆகாதீங்க. நீங்க கால கட் பண்ணீங்க, உங்க அகௌண்ட்லேந்து 10 லட்சம் கட் ஆகிடும்......!!"

"மவனே நீ என்ட்ட மாட்ன, காலிடா நீ....!!"

"சரி சரி. நம்ம கேம்'க்கு வருவோம். ரொம்ப சிம்பிள் கேள்வி, என் குரலை வச்சு, என் பெரு என்னன்னு கண்டுபிடிங்க. அப்டி கண்டு பிடிச்சா, அடுத்த கேள்வி கேப்பேன்.....!!"

"அப்டி இல்லேன்னா...."

"ரொம்ப நெகட்டிவ்வா பேசுறீங்க. ஹ்ம்ம்.... அப்டி இல்லேன்னா.... ஒரு லட்சம் பெனால்ட்டி...!!"

இந்த விளையாட்டை யாரு ஆடுகிறார்கள் என்று இளங்கோவால் யூகிக்க முடியவில்லை. தன் பணம் முழுவதும் கரைந்துவிடுமோ என்ற பயம் அவனை தொற்றிக்கொண்டது. தன் மனைவி வேறு, அருகில் இருந்து, "போன்ல யாரு? போன்ல யாரு?"என்று கேட்டுக்கொண்டே இருந்தாள்.

"இரு மாலினி.... அதயேதான் அவனும் கேக்குறான்...... கொஞ்ச நேரம் பேசாம இரு.."

"என்ன மிஸ்டர், பதில் சொல்லுங்க...... நான் 'யார்' பேசுறேன்......??"

தெரியாது என்று சொல்வதற்கு இளங்கோவின் மனம் பதறியது.

"நீங்க....... கண்ணனனா பேசுறது....??" என்று கேட்ட சில வினாடிகளில் அவனது கைபேசியில், ஒரு லட்சம் குறைந்தது என்று ஒரு குறுஞ்செய்தி வந்தது.

"ஐயயோ... மறுபடியும் ஒரு லட்சமா....... சார் நீங்க யாரு'னு தெரியல.. தெயவுசெய்து சொல்லிடுங்க.....!!"

"ஹ்ம்ம்..... நான் யாரு'னு தெரியணுமா.... சரி... நான் சொல்றத கவனமா கேளுங்க..... உடனே கிளம்பி கரைக்கு வந்து, ஒரு ஆட்டோ புடிச்சு, அதே ரோட்ல 3 கிலோமீட்டர் தாண்டி ஒரு பிள்ளையார் கோவில் இருக்கு. அங்க வந்து நான் யாரு'னு தெரிஞ்சிக்கோங்க... ஆனா இன்னும் 15 நிமிஷத்துல வரணும்...!!" என்றவுடன் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது. அலறியடித்துக் கொண்டு எழுந்து,

"மாலினி, நீ இங்கேயே இரு. நான் ஒரு அர மணி நேரத்துல வந்திர்றேன்.... நீ பத்திரமா இரு. எதாவது பிரச்சனைன்னா இந்த நம்பர்க்கு கூப்டு..!!" என்று கூறி ஒரு துண்டுச் சீட்டில் எழுதி கொடுத்துவிட்டு, ஓட்டமாய் ஓடினான். அருகில் இருந்த சாலையில், கண்ணிற்க்கு எட்டிய தூரம் வரை ஆட்டோவே இல்லை. அந்த கோவில் இருக்கும் திசை நோக்கி ஓடத் தொடங்கினான். சுமாராக 1 கிலோமீட்டர் ஓடிய பின்னர், ஒரு ஆட்டோவை பார்த்தான், உடன் அதில் ஏறி, அதே பிள்ளையார் கோவிலுக்கு போகும்படி சொன்னான். போகும் வழியில், தன் நண்பன் ஒருவனுக்கு போன் செய்து நடந்ததை கூறி, தனக்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டான். சொல்லிய இடம் வந்ததும், பணத்தை கொடுத்துவிட்டு இறங்கினான். நள்ளிரவு என்பதால், கோவில் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. அர்ச்சனை தட்டு கடையும், வாழைப்பழ கடையும் மூடியிருந்தன. கோவிலின் வாசலில் சில பிச்சைக்காரர்கள் படுத்திருந்தார்கள். இளங்கோவிற்கு தலைகால் புரியவில்லை. ஒரு பிச்சைக்காரரை எழுப்பி,

"தாத்தா..... இங்க யாராவது வந்தாங்களா...??" என்றான் இளங்கோ.

அந்த கிழவர் குடிபோதையில் இருந்ததால், இளங்கோவின் கேள்விக்கு பதில் சொல்ல இயலவில்லை. அப்போது அந்த அர்ச்சனை கடையின் வெளியிலிருந்த பி.சி. போன் ஒலித்தது. அந்த அழைப்பு 'தனக்கானதுதான்' என்று அவனது உள்ளுணர்வு கூறியது. அதை எடுத்து,

"ஹலோ, நீங்க சொன்ன இடத்துக்கு வந்துட்டேன்.... !!" என்று பதறிய குரலில் கூறினான் இளங்கோ.

தொலைப்பேசியின் மறுமுனையிலிருந்து பதில் வந்ததும் அதிர்ந்து போனான்.

"என்னங்க.... என்ன காப்பாத்துங்க....... யாரோ ஒருத்தன் துப்பாக்கியோடு உள்ள வந்து....!!" என்று மாலினி அலறிக்கொண்டிருக்கும் போது, மீண்டும் அந்த மர்ம மனிதனின் குரல் தொடர்ந்தது.

"மிஸ்டர். இளங்கோ.. நான் தான். ஒன்னும் கவலை படாதீங்க....!!"

"டேய்... அங்க என்னடா பண்ற..... மாலினி மேல ஒரு தூசு பட்டது.....?? நீ காலி....!!"

"தூசா...... ச்ச ச்ச..... நான் சொல்றத நீங்க கேக்கலேனா, உங்க மனைவி மேல தூசு படாது, புல்லெட் தான் படும்..!!"

"மாலினிய ஒன்னும் பண்ணிடாதீங்க பிலீஸ்….. நான் என்ன பண்ணனும்.. சொல்லுங்க.... !!"

"ரொம்ப ஈஸி. நான் யாருன்னு சொல்றேன். என்ன நீங்க, எப்ப எங்க மொதல்ல பாத்தீங்கன்னு சொல்லிட்டா, உடனே இந்த கேம் முடிஞ்சுரும்... ஒரு வேலை நீங்க சொல்லலேன்னா, பெனல்ட்டி தான்... பட் திஸ் டைம், பெனல்ட்டி வில் பி டிஃபரென்ட்...!!"

சற்றும் சிந்திக்காமல் தன் மனைவியை விட்டு வந்தது மாபெரும் தவறு என்பதை உணர்ந்த இளங்கோ, இனி கவனமாக செயல்பட முடிவெடுத்தான்.

"சரி ஓகே... உங்க பேரு என்ன......??"

"என் பேரு......... எம்.ராகவன்......!!" ராகவன் யாரென்று இளங்கோவின் நினைவிற்கு சிறிதும் வரவில்லை.

தன்னால் ஏமாற்றப்பட்டவர்களின் ஒருவனாகத்தான் இருக்கவேண்டும், ஆனால் தன்னால் ஏமாற்றப்பட்டவர்களின் எண்ணிக்கையோ கணக்கில் அடங்காதது. நள்ளிரவு நேரம், பழக்கம் இல்லாத ஊர், தான் செய்த பாவங்களில், தன்னை எந்த பாவம் துரத்துகிறது என்ற கேள்வி வேறு, அந்த சூழ்நிலையில்,

"சார், நீங்க யாருன்னு தெரியல சார். வேனுண்னா என் அக்கவுண்ட்ல இருக்குற எல்லா பணத்தையும் எடுத்துக்கோங்க, என் மாலினியை மட்டும் விட்டுங்க, பிலீஸ்.......!!"

"ஹா ஹா ஹா..... அக்கவுண்ட்ல இருக்கறது மட்டும் குடுத்துட்டு எஸ்கேப் ஆயிடலாமுன்னு நெனச்சீங்களா.... அப்ப உங்க வீட்டு கேரேஜ்ல இருக்குற மீதி பணத்தை யார்கிட்ட தருவீங்க......??" என்று ராகவன் சொன்னதும், இளங்கோவின் எண்ணத்தில் இருள் சூழ்ந்தது.

"ஐய்யயோ....... அந்த பணத்தை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும்...??"

"உங்கள பத்தி எனக்கு எல்லாமே தெரியும்.....!! ஆனா என்ன பத்தி உங்களுக்கு என்ன தெரியும்...?? அது தான் கேம்....!!"

"சார், அது கஷ்டப்பட்டு சம்பாதிச்ச பணம் சார்.....!!"

"எது.....?? அதுவா.......?? இல்ல மிஸ்டர். இளங்கோ, அது மத்தவங்கள கஷ்டப்படுத்தி சம்பாதிச்ச பணம்'னு சொல்லுங்க...!!"

சிறிது நேரம் யோசித்த இளங்கோ, "அப்போ, கொஞ்ச நாள் முன்னாடி, ஒரு நைட் என் வீட்டுக்கு வந்தது நீங்க தானா....??"

"பரவா இல்லையே, கண்டுபுடிச்சிட்டீங்களே.......!!"

"சார், அப்போ கேம் ஓவர் சார்......!!"

"நோ நோ...... நீங்க நம்ம எப்போ மொதல்ல பாத்தோம்னு சொல்லணும், அப்ப தான் கேம் ஓவர்....!!"

இவ்வாறே இருவரின் உரையாடல் தொடர, பொறுமை இழந்தான் ராகவன்.

"சாரி இளங்கோ. நீங்க சொல்ற மாறி தெரியல... நம்ம பெனால்டிக்கு போக வேண்டியதுதான்....!!"

"சார்..... சார்.... சார்....!!" என்று இளங்கோ கதறினான்.

"உங்களுக்கு எதுத்தமாறி, ஒரு கார் இருக்கும். அங்கே போயி தொறந்து, டிரைவர் சீட்ல ஒரு அட்ரஸ் இருக்கும். அங்க நீங்க சரியா காலேல ஆறு மணிக்குள்ள இருக்கணும்.... அப்டி இல்லேனா, நோ மோர் பெனால்ட்டி,,,,,,,,,,,,, கேம் ஓவர். உங்க பணம் ஒரு ரூபாய் கூட கெடக்காது.. உன் மாலினியும் உயிரோடு இருக்காது..!!"

மறுப்பு தெரிவிக்கும் நிலையில் இல்லாத இளங்கோ, ஒத்துக்கொண்டான்.

"அப்டியே அந்த கார்ல இங்க வந்து, உங்க மனைவியை காப்பாத்திடலாம்னு பிளான் எதுவும் பண்ணி உங்க நேரத்தை வேஸ்ட் பண்ணாதீங்க. ஏன்னா..... இந்த போட் ஹவுஸ், நீங்க நெனக்கிற எடத்துல இல்ல. நீங்க கெளம்புனா உடனெவே, வேற திசைல போயிட்டு இருக்கு..... ஒரு உண்மைய சொல்லிட்டு, போன கட் பண்றேன். அன்னிக்கி ராத்திரி உங்க வீட்டுக்கு வந்தது, எதயும் திருட இல்ல. இந்த டூர் பேக்கஜ்ஜ உங்க வீட்ல வெக்காதான்...!!" என்று கூறி அழைப்பை துண்டித்தான் ராகவன். இளங்கோ வேக வேகமாக, அந்த காரில் ஏறி முகவரியை பார்த்தான். கேரளத்தில் இருக்கும் ஏதோ ஒரு இடம் அது. எந்த திசையிலுள்ளது என்பது கூட இளங்கோவிர்க்கு தெரியாது. சாவியுடன் தயாராக இருந்த காரை ஓட்டத்துவங்கி, வழியில் தென்படும் யாரிடமாவது கேட்டு செல்லலாம் என்று முடிவு செய்தான். மீண்டும் அதே நண்பனிடம் போன் செய்து, ராகவனை பற்றி கூறி, விசாரிக்க வேண்டினான். டீ கடைகளிலும், வழியில் பலரிடமும், கேட்டு கேட்டு ஒரு வழியாக கொடுக்கப்பட்ட இடத்திற்கு வந்தான். அந்த இடத்திலோ, ஒரு பாழடைந்த வீடு இருந்தது. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, அந்த வீட்டின் வாசக்கதவிற்கு அருகாமையில் வந்து நின்று, சுற்றி நோட்டம் விட்டான். மணி சரியாக ஆறை எட்டியபோது, அந்த வீட்டினுளிருந்து, ஒரு கைபேசியின் ஒலி ஒலித்தது. திடுக்கிட்ட இளங்கோ, அந்த கதவை திறக்க முற்பட்டான். பூட்டப்படாமல் இருந்ததால், உடன் திறந்தது. உள்ளே பழைய ஜமகாலத்தால் மூடப்பட்ட ஒரு நாற்காலியும், புழுதி அடைந்த மேஜையும் போடப்பட்டிருந்தது. அந்த மேஜையின் மீது ஒரு கையேடும், இரண்டு கைப்பெட்டிகள் இருந்தன. கைபேசியின் ஒலி மட்டும் ஒலித்தது. ஆனால் அது எங்கிருந்து ஒலிக்கிறது என்பது தெரியாததால், அதை தேடலானான். ஒரு முறை ஒலித்து நின்று, மீண்டும் ஒலித்தது. மேஜையிலிருக்கும், டிராயரிலிருந்து வந்தது அந்த ஒலி. நாற்காலியில் அமர்ந்து, டிராயரை திறந்து, அங்கு ஒலித்துக்கொண்டிருந்த கைபேசியை எடுத்து பேசினான்.

"ஹலோ...... நான் நீங்க சொன்ன நேரத்துக்கு வந்துட்டேன்....."

"சூப்பர்... மிஸ்டர் இளங்கோ..... ஆனா எந்த காரணத்துக்காகவும் எழுந்துருக்க கூடாது. அந்த சேர்'க்கு கீழ ஒரு பாம் வச்சிருக்கேன். எழுந்தா வெடிச்சுடும்....!!"

"என்னது பாமா...... யாரு சார் நீங்க.... என்ன ஏன் சார் இவ்ளோ டார்ச்சர் பண்றீங்க.....!!"

"பயப்படாதீங்க..... அந்த பாம செயலிழக்க செய்றது ரொம்ப ஈஸி. அந்த டேபிளோட கடைசி டிராயர்ல, பாமோட கண்ட்ரோல் பேனல் இருக்கு. ஜஸ்ட் தொறந்து, ஆஃப் பண்ணா போதும்….!!" என்று ராகவன் சொன்ன நொடியே, அதை துறக்க முற்பட்டான் இளங்கோ. ஆனால் அது தோல்வியில் முடிந்தது.

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, இளங்கோ.... இவ்ளோ அவசரப்பட்டா எப்படி....!! இப்போ உங்கள பாக்க, கொஞ்ச பேர் வருவாங்க. அவங்க ஆளுக்கு ஒரு துண்டு சீட்டு தருவாங்க. அந்த சீட்டுங்கள ஒன்னா சேத்தா, ஒரு பாஸ்வர்டு கெடைக்கும். அதை வச்சு நீங்க டிராயர தொறந்து, பாமை ஆஃப் பண்ணிடலாம்...!!" ஒன்றுமே புரியாமல் திரு திருவென்று விழித்த இளங்கோ, "என்ன சார் இதெல்லாம்... எனக்கு ஒண்ணுமே புரியல.... எதுக்காக என்ன இப்படி பாம் மேல உக்கார வச்சு, டார்ச்சர் பண்றீங்க...??" என்று புலம்பியவாறே, அந்த மேஜைமேலிருந்த பெட்டிகளை திறந்து பார்த்து அதிர்ந்து போனான். பணம் கட்டுக் காட்டாக அந்த பெட்டிகளில் இருந்தன. இவ்வளவு பணமும் தன் பணமாக இருக்குமோ என்ற சந்தேகத்துடன்,

"சார், இந்த பெட்டீல, இருக்குற பணம்ம்ம்.........!!" என்று இழுத்தான் இளங்கோ.

"நல்ல வேலை, ஞாபக படுத்துனீங்க.... அந்த துண்டு சீட்டு சொன்னேன்ல, ஒவ்வொரு சீட்டும் 15 லட்ச ரூபாய் தான். பெட்டீல இருக்குற 'உங்க' பணத்த குடுத்து 'உங்க' உயிர காப்பாத்திக்கோங்க...!!" என்று கூறி அழைப்பை துண்டித்தான் ராகவன். தான் இத்தனை ஆண்டுகளாக சேமித்த பணம், வெறும் சில நிமிடங்களில் கறையப்போவதை நினைத்து வருந்தியபடி, தான் அமர்ந்திருந்த நாற்காலியின் மேலிருக்கும் ஜமகாலத்தை உயர்த்தி பார்த்தான். பெரிய வெடிகுண்டு, பல மின்-கம்பிகள் இணைக்கப்பட்டு 'பீப்-பீப்-பீப்...' என்ற ஒலியுடன் ஒரு சிவப்பு விளக்கு மின்னிக்கொண்டிருந்தது. சூழ்நிலையின் பிடி தன்வசம் இல்லாததை உணர்ந்த இளங்கோ, ராகவன் சொன்னதை செய்து தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள முடிவுசெய்தேன். பத்து நிமிடங்கள் கழிய, யாரோ ஒருவர் அந்த வீட்டிற்குள் வந்தார். அவர் பின் மேலும் ஒருவர் வந்தார். அவ்வாறாக, ராகவன் கூறியது போல் சிலர் வந்து இளங்கோவின் மேஜையின் முன், வரிசையில் நின்றனர். முதல் மனிதர், இளங்கோவிடம்

"மிஸ்டர், இளங்கோ. 15 லட்சம் எடுங்க....." என்று கையை நீட்டினார். மேலும் சிந்திக்காமல், பெட்டியிலிருந்து ஒரு ரூ.15 லட்ச கட்டை எடுத்து கொடுத்தான். அதை வாங்கிய நொடியே, ஒரு சீட்டை நீட்டினார் அந்த மனிதர். அந்த சீட்டை பிரித்துப் பார்த்தான். அதில் "எஸ்" என்ற ஆங்கில எழுத்து எழுதி இருந்தது. அவ்வாறாக ஆறு சீட்டுகள் கிடைத்த பிறகு, கடைசி மனிதர் தன் முகத்தில் கைகுட்டை கட்டியபடி இளங்கோ முன் நின்றார். அவரை சற்றும் பொருட்படுத்தாமல்,

"இந்தாங்க...." என்று கடைசி பணக்கட்டை நீட்டினான். அந்த கட்டை வாங்கிய பிறகும், அவர் சீட்டை தரவில்லை.

"சார், சீட்டு தாங்க சார், அதான் காசு வாங்கிட்டீங்களே...!! என்றான் இளங்கோ.

"உங்களுக்கு சீட்டு வேணும்னா, என் கேள்விக்கு பதில் சொல்லுங்க.....!!" என்றார் அந்த மனிதர். அவரின் குரல் இளங்கோவிற்கு பரிட்சயமான குரலாக இருந்தது. உயர்ந்த புருவங்கள் வியப்பை தாங்கி பிடித்த படி,

"கேளுங்க, தெரிஞ்சா பதில் சொல்றேன்....!!"

"உங்களுக்கா பதில் தெரியாது மிஸ்டர்.கார்த்திக்.....?!?!" என்று தன் முகத்திரையை அவிழ்த்து முகத்தை காட்டினான் துபாய் குணசேகரன். அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றான் இளங்கோ.

"நீ தான் இதுக்கெல்லாம் காரணமா.....?? உன்ன சும்மா விட மாட்டேன்டா.....!!"

"உணர்ச்சிவச படாதீங்க கார்த்திக்....!! உங்களோட சண்ட போட நான் இங்க வரல. எனக்கு தேவை, ஒரே ஒரு பதில்... அவ்ளோ தான்....!!"

"உன்கிட்ட வெறும் பத்து லட்சம் தான் வாங்குனேன்.... ஆனா நீ என் கிட்ட இருந்த பல லட்சத்தை சுருட்டிட்ட இல்ல.....!!"

"அதெல்லாம் இல்ல..... எப்படி அந்த பாறைலேர்ந்து தங்கம் கொட்டிச்சு...?? இதுக்கு பதில் சொல்லு, நான் என் சீட்டை தர்றேன்....!!" என்றான் குணசேகரன்.

"எந்த நேரத்துல என்ன கேள்வி கேக்குற....?? அதான் அவ்ளோ பணத்தையும் எடுத்துக்கிட்ட இல்ல..... சீட்டை குடு....!!"

என்று பல முறை இளங்கோ கேட்டும், பதில் இல்லாமல் தான் சீட்டை தரப்போவதில்லை என்று திட்டவட்டமாக கூறினான் குணசேகரன். தன் உயிரை காப்பாற்றிக்கொள்ள வேறு வழியேதும் இல்லாமல்,

"சரி... சொல்றேன்... ஆனா நான் சொன்னா நீ சீட்டை தருவேன்னு என்ன நிச்சியம்.....!!"

"உன்னமாரி ஏமாத்துக்காரன் நான் இல்ல... என் வார்த்தையை காப்பாத்துவேன்..!!"

"ஹ்ம்ம்ம்.... சொல்லி தொலக்கிறேன்... ரொம்ப சிம்பிள்...... என் ஷாட்-கன்'னோட புல்லெட்ட தொறந்து, கன்-பவுடர் பாதிய எடுத்துட்டு, அதுல கோல்டு-பவுடர மிக்ஸ் பண்ணிடுவேன். எங்க சுட்டாலும், புல்லெட் வெடிச்ச உடனே கோல்டு-பவுடர் அப்டியே செதறிடும்..... அது பாக்கரத்துக்கு பாறைலேர்ந்து வந்த மாதிரி இருக்கும்அவ்ளோதான்.... இப்போ சீட்டை குடு....!!" என்று இளங்கோ விளக்கினான்.

"அட பாவி..... எப்டிலாம் ஏமாத்துறீங்க... இந்த உன் சீட்டு... !!" என்று தன் கையை நன்கு உயர்த்தி காட்டினான். இளங்கோவால் எழுந்து நிற்க முடியாது என்பதை அறிந்தே தன் கையை உயர்த்தி காட்டினான்.

"குணசேகரன்...... கொஞ்சம் கையை கீழ இறக்கிக் காட்டுங்க......!!"

"ஏன்....... எழுந்து வாங்க மாடீங்களோ...... ஒழுங்கு மரியாதையா எழுந்து நின்னு வாங்கிக்கோ.....!!"

"இல்ல சார்..... அதான் பணத்தையும் கொடுத்துட்டேன், புல்லட் மேட்டரையும் சொல்லிட்டேன்.... ப்ளீஸ் சார்.... கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க சார்.....!!" என்று இருவரும் உரையாடலை முடிக்கும் தருணத்தில், அங்கு மீண்டும் ஒருவன் வந்தான்.

“என்ன சார், அதான் பணம் குடுத்துட்டேனே.... எதுக்கு திரும்பவும் வந்திருக்கீங்க....??” என்று கேட்டான் இளங்கோ.

“இது எல்லாத்துக்கும் காரணம் நான் தான்..... என் பெயர் தான் ராகவன்.....”

அந்த வார்த்தைகளை கேட்டவுடன் இளங்கோவிற்கு சட்டென்று கோவம் வந்தது. ஆனால், ஆத்திரப்படாமல் சற்று நிதானமாக யோசித்தான். தனக்கு பாதகமாக இருக்கும் சூழ்நிலையை சாதகமாக்க உபாயம் செய்தான்.

ராகவன், ஒழுங்கா என் பணத்த திருப்பி குடுத்துடு, மாலினியையும் விட்டுடு, இல்லைனா நடக்குறதே வேற...!!

என்ன இளங்கோ, திடீர்னு உன் குரல் உயருது...... பாம் மேல உக்காந்தும் உன் ஆட்டம் குறயிலையே.....!!

ஹா ஹா ஹா....... இப்போ நான் சொன்னத நீ செய்ல, நான் எழுந்திருவேன்..... எழுந்தா என்ன ஆகும்னு உனக்கே தெரியும்...... மரியாதையா பணத்த கொண்டா.....!!

இளங்கோவின் வில்லத்தனமான வார்த்தைகளை கேட்ட உடன் மிரண்டு போனான் குணசேகரன். அந்த பாறை ரகசியத்தை தெரிந்து கொள்ள வந்து நான்றாக மாட்டிக்கொண்டோமே என மனதிற்குள்ளேயே புலம்பினான் குணசேகரன்.

ராகவன், பணத்த குடுத்திடலாம். உயிர் தான் முக்கியம். சொன்னா கேளுங்க....!!

பதறாதீங்க குணா..... இவன்லாம் எழுந்திருக்க மாட்டான்.... என்று குணசேகரனிடம் கூறியவாறே இளங்கோ பக்கம் தன் பார்வையை திருப்பினான் ராகவன்.

எங்க... எழுந்திரு பாப்போம்... எனுக்கு உயிர் மேலலாம் பயம் கிடையாது.... நீ என்ன பண்ணாலும் உனக்கு பணமும் கிடையாது, மாலினியும் கெடக்கமாட்டா.....

என் பொறுமையை சோதிக்காத ராகவன்... நான் 5-லேர்ந்து 1-வரைக்கும் எண்ணுவேன். அதுக்குள்ள என் அக்கவுன்ட்லேர்ந்து எடுத்த பணத்த டிரான்ஸ்பர் பண்ணு.... பண்ணல நான் எழுந்திருவேன்.....!! என்று கூறி எண்ணத்துவங்கினான் இளங்கோ. ஆனால் சற்றும் தன் நிலையிலிருந்து மாறாமல் நின்றான் ராகவன். 1 வரை எண்ணியப் பின்னரும் பணம் தர ஒப்புக்கொள்ளாததால், கண்களை இருக்க மூடிக்கொண்டு நாற்காலியை விட்டு எழுந்தான் இளங்கோ. வெடி குண்டு வெடிக்குமென்று எதிர்பார்த்த இளங்கோவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

அதுல வெடி குண்டே இல்ல இளங்கோ.... நான் சும்மா செட் பண்ணது...... நீ எழுந்திருக்க மாட்டேன்னு நெனச்சேன்....!! என்று ராகவன் கூற, எதுவும் இளங்கோவின் செவியில் விழவில்லை. பற்களை கடித்தபடி ராகவனை தாக்க முயன்றான். தடுக்க முடியாமல் திணறினான் ராகவன். குணசேகரனும் உதவிக்கு வந்தான். அந்த கைகலப்பில், இளங்கோவின் பின்மண்டையில் அடிபட்டு மயக்கமானான்.

சில மணிநேரம் கழிந்த பின்னர், இளங்கோவிற்கு நினைவு திரும்பியது. கைகளும் கால்களும் பின்புறமாக ஒரு சங்கிலியால் தரை வளையத்தில் கட்டப்பட்டிருந்தது. கண் விழித்த சில வினாடிகள் மங்கலாகவே இருந்தது. தான் எங்கு இருக்கிறோம் என்பதை உணர்ந்த உடன் மீண்டும் அதிர்ச்சி அவனை ஆட்க்கொண்டது. குணசேகரனை ஏமாற்றிய அதே தங்க கிணற்றின் அடித்தளத்தில் கட்டப்பட்டிருந்தான். அருகில் ராகவன் அமர்ந்திருந்தான்.

வணக்கம் இளங்கோ..... என்ன நல்ல தூக்கமா......!!

என்னால முடியல ராகவன்...... நீ எதுக்காக என்ன இப்படி டார்ச்சர் பண்றேன்னு தயவுசெய்து சொல்லு.....!!

ஹ்ம்ம்...... உன்னோட வலது கை மட்டும் கட்டப் படல... இதோ இருக்குல்ல நம்பர் பூட்டு, ஒரு நாலு டிஜிட் நம்பர் போட்ட தொறக்கும், அந்த நம்பர் உனக்கு தெரியும்.....!!

டேய்....டேய்...... போதும்.... போதும்.... என்ன விட்டுடுடா.... ப்ளீஸ்.......!!

இதே மாதிரி 6 வருஷத்துக்கு முன்னாடி நானும் உன்கிட்ட இப்படிதான் கெஞ்சினேன்.... உனக்கு எப்படியும் ஞாபகம் இருக்காது. அப்ப நீ சென்னை ஏர்போர்ட்ல செக்யூரிட்டியா வேல பாத்துட்டு இருந்த. எனக்கு கெடச்ச முதல் வெளிநாட்டு வாய்ப்பு. பல கனவுகளோட நான் இருந்த நேரம் அது. ஆனா உன்னால எல்லாம் பகல் கனவாயிடிச்சு.....!!

ஹோ..... அந்த ஸ்கேம்ல மாட்ன ஆளா நீ.....!!

ஹ்ம்ம்..... ஆமாம்..... நான் எதுவுமே பண்ணலையே, ஆனா என்ன போய் 2 வருஷம் ஜெயில்ல இருக்க வச்சிட்டியே.....!!

ராகவன், அது பெரிய பெரிய வி.ஐ.பிகாக பண்ண ஸ்கேம். அதுல நீ மாட்னது உன் அன்லக்கி.... அது என்ன, நான் மட்டுமா பண்ணேன். பல மேலதிகாரிகள் பண்ணாங்க, நான் அதுல ஒரு சின்ன வேல தான் பாத்தேன். அதுக்காக நீ என்ன மட்டும் தண்டிக்கற்து ஞாயமே இல்ல....!!

நீயெல்லாம்  ஞாயம் அஞ்ஞாயம் பத்தி பேசுற.... நீங்க எல்லாம் சேர்ந்து எதோ பண்ணீங்க, எதுக்கு என் பைல புல்லெட்ட போட்ட.....!!

அதுவா...... நீங்களும் மந்திரி பையனும் பாக்கர்த்துக்கு ஒரே மாதிரி இருந்தீங்க... செக்யூரிட்டி செக்ல புல்லெட் வச்சிருந்து மாட்னா, 5 வருஷமாவது சிறைதண்டனை கிடைக்கும்.  பெரிய பெரிய ஆளுங்க பைல போட்டா, கேஸ்-லேர்ந்து வெளிய வர நல்ல கிம்பளம் கெடைக்கும்..... அதுல எனக்கு கொஞ்சம் கெடைக்கும்.... அன்னிக்கி உன் கேட்ட நேரம், உன் பைல புல்லெட்ட மாத்தி போட்டுட்டேன்......!!

நீ போட்ட புல்லெட், என் வாழ்க்கயையே பெரட்டிபோட்டுடுச்சி.... இதுல காமெடி என்னனா, நீ என்ன புடிச்சவுடனே, என்ன விட்டுடுன்னு கெஞ்சினேன். திடீர்னு உன் முகம் மாறிச்சு, என் பாஸ்போர்ட்ட பாத்த... உடனே ஒரு நம்பர் சொன்ன.... அந்த நம்பர உள்ள சொன்னா விட்டுடுவாங்கன்னு வேற சொன்ன .....!! 

ஹோ..... சொன்னனா...... அப்புறம் என்ன பிரச்சன.....??

எவ்ளோ ஈசியா கேக்குற..... நீ சொன்னதான், ஆனா பதட்டத்துல அந்த கோடு நம்பர மறந்துட்டேன்.... நான் எவ்ளவோ உள்ள சொன்னேன்.... ஆனா யாரும் என்ன நம்பல.... உன்ன கை காமிச்சு கூப்பிட்டேன்.... நீயும் என்ன சட்ட பண்ணல....என்ன அரெஸ்ட் பண்ணிடாங்க.. ஜெயிலுக்கு போன பிறகுதான் எனக்கு அந்த கோடு நம்பர் ஞாபகம் வந்துது...!!

கோடு நம்பர மறந்தது உன் தப்பு, அதுக்கு நான் என்ன பண்றது..... சரி.... அப்புறம் என்ன ஆச்சு.....???

டேய், நான் என்ன கதையா சொல்றேன்..... அப்புறம்னு கேக்குற..... இவ்ளோ நடந்தும் உனக்கு கொழுப்பு அடங்கல..... உன்ன ஸ்கெட்ச் போட்டு தூக்குனதுல தப்பே இல்ல....!!

சார் சார்.. சாரி சார்.. அதான் பணம் கெடச்சதுல்ல, என்ன விட்டுடுங்க சார்... ப்ளீஸ்..!!

இந்த தண்டனை என் பைல மட்டும் புல்லெட் போட்டதுக்கில்ல, என்ன மாதிரி பல அப்பாவீங்க பைல தெரிஞ்சே போட்டிருக்க.... அந்த விஷியமே ஜெயில்ல தான் தெரிய வந்துது.... ரெண்டு வருஷம் கழிச்சு, நீங்க எல்லாரும் மாட்டிகிடீங்க. நீங்க பண்ண தப்புக்கு பேப்பர்ல புல்லெட் பிளான்டிங் ஸ்கேம்னு கொட்ட எழுத்துல போட்டாங்க. போயி மரம் நடுங்கனு எல்லாரும் சொல்வாங்க, ஆனா நீங்க புல்லெட் நட்டீங்க..... அதுக்கு அப்புறம் தான் எங்கள ரிலீஸ் பண்ணாங்க... ஆனா வேலையும் போச்சு, நல்ல பேரும் போச்சு, டியுல வாங்கின வீடும் போச்சு, நிம்மதியான வாழ்க்கையும் போச்சு. அப்ப தான், நாங்க எல்லாரும் சேர்ந்து, பிளான் போட்டோம். உன்ன பின்தொடர ஆரம்பிச்சோம். உன்ன பத்தின பல திடிகிடும் விஷியங்கள் எங்களுக்கு தெரிய வந்துது.... அதனாலதான் இவ்ளோ பெரிய தண்டனை.......!!

ஐயையோ..... நான் திருந்துற ஐடியால தான், கடைசியா குணசேகரனோட இந்த திருட்டு வேலய நிறுத்திடலாம்னு இருந்தேன். நான் நெனச்ச மாதிரியே, லம்ப்பா கெடச்சுது... நான் இப்போ திருந்திட்டேன் சார்.... என்ன விட்டுடுங்க.....!!

நீ தப்பிக்க ஒரே வழி தான் இருக்கு. ஏர்போர்ட்ல நீ எனக்கு சொன்னியே ஒரு 4 டிஜிட் கோடு நம்பர், அது தான்டா இந்த பூட்ட ஓப்பன் பண்ற நம்பர்..... !! என்ற ராகவனின் வார்த்தைகள் இளங்கோ மீது இடியாய் விழுந்தது.

சார், அந்த நம்பர் எனக்கு எப்படி சார் ஞாபகம் இருக்கும், அஞ்சு ஆறு வருஷத்துக்கு முன்னாடி நடந்த விஷயம் அது. உங்கள கெஞ்சி கேட்டுகிறேன்... என்ன விட்டுடுங்க சார்...!!

பழிவாங்கும் தோரணையில், நீ நம்பர மறந்தா அது உன் தப்பு, அதுக்கு நான் என்ன செய்றது....?!?!

சார் சார், அட்லீஸ்ட் என் மனைவி மாலினிக்காகவாது என்ன விட்டுடுங்க சார்... அவள இளமயிலே விதவை ஆக்குன பாவம் உங்களுக்கு வேணாம் சார்...!! என்ற இளங்கோவின் வார்த்தைகளை சற்றும் காதில் போட்டுகொள்ளாமல், அந்த கிணற்றின் படிக்கட்டுகளில் ஏறி நிலப் பரப்பை அடைந்தான். அங்கிருந்து கீழே குனிந்து,

என்ன இளங்கோ எனக்கு ஒன்னும் தெரியாதுன்னு நெனச்சியா...?? உன் மனைவி மாலினி பேர வச்சி தப்பிக்கலாம்னு நெனக்கிறியா.... நீ அவளுக்கு பண்ண துரோகத்துக்கு, இதுதான் சரியான தண்டனை. சொத்துக்காக உன் மாமனாரை நட்புரவாடி ஸ்லோ பாயிசன் குடுத்து கொன்னுட்டு, அந்த பொண்ண அனாதையாக்கி வாழ்க்கை தர்றமாரி நடிச்சி ஏமாத்துன விஷயம் எனக்கு தெரியாதுன்னு நெனச்சியா... என்னால இந்த ஸ்லோ பாயிசன் மேட்டர் அவரு மரணத்துக்கு அப்புறம் தான் தெரிய வந்துது. இல்லனா அவர எப்படியாவது காப்பாத்தி இருப்பேன்.....!! என்ற ராகவனின் கனமான பேச்சு எதிரொலியுடன் இளங்கோவை அடைந்தது.

சார் சார்...... எதோ தெரியாம பண்ணிட்டேன்.... என்ன இப்படியே விட்டுடாதீங்க சார்..!!

உன் மாமனாரை காப்பாத்த முடியாம போச்சு, உன்ன இங்கேயே விட்டா தான், மாலினியை உன்கிட்டேர்ந்து காப்பாத்த முடியும். ஐ அம் சாரி இளங்கோ.... குட் பை....!! என்று கூறி திரும்பி பார்க்காமல் அங்கிருந்து கனத்த இதயத்துடன் சென்றான்.

என்ன காப்பாத்துங்க..... என்ன காப்பாத்துங்க......!! என்று அலறி அலறி ஓய்ந்து போனான் இளங்கோ. அவ்வாறே ஒரு நாள் போனது. தான் நன்மை செய்திருந்தால், மலரும் நினைவுகளாக இருந்திருக்கும். ஆனால் இளங்கோ செய்ததோ தீமை. இறுதி வரை, 4 இலக்க எண் நினைவிற்கு வரவில்லை. அந்த மலரா நினைவே, இளங்கோவின் வாழ்விற்கு முற்றுபுள்ளி வைத்தது.

(முற்றும்)

ஞால ஞதி - சிறுகதை - விஜய் பீமநாதன்.

  தனது காய்கறி கடையில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்தும் , அதை பெரிதும் பொருட்படுத்தாமல் , ஒரு நீட்டு கம்பை தேடிக்கொண்டிருந்தாள் நட...