Friday 21 August 2020

பிறப்பு ரத்து - சஸ்பென்ஸ் சிறுகதை (Tamil Crime Thriller Suspense Short Story) - விஜய் பீமநாதன்.

    என்னிடம் வந்து யாராவது எனது நினைவாற்றலை அழிப்பேன் என்று கூறியிருந்தால், நான் உடன் சம்மதித்து இருப்பேன். இது வரை என் வாழ்நாளில் பார்த்திராத வழக்கு. என்னை மாதக்கணக்கில் தூங்க விடாத வழக்கு. மாத்திரைப் போட்டுகொண்டு தூங்கினாலும், கனவிலும் அதே வழக்கு தான். ஆம், சிறுவன் ராமச்சந்திரனுக்கு நிகழ்ந்த கோர சம்பவம். என் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டது.

சுமாராக 10 ஆண்டுகளுக்கு முன், அன்றுவரை நான் 20 கொலை வழக்கிலாவது குற்றத்தை கண்டுபிடித்திருப்பேன். அதுவும் சாதாரண வழக்கு தான் என்று எண்ணி, தொலைபேசி அழைப்பு வந்ததும், சம்பவம் நடந்த இடத்தை அடைந்தேன். பயத்தில் மெய்சிலிர்த்துவிட்டது. நகரத்துக்கு ஒதுக்குபுறமான, பரபரப்பில்லாத, ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் வயக்காட்டில், ராமச்சந்திரனின் உடல் இருந்தது. அவனுக்கு வயது 10 இருக்கலாம். உடலில் ஒட்டுத்துணி இல்லை. நான் வருவதற்கு முன்னால் எனது சக ஊழியர்கள் வந்து இடத்தை சீர்படுத்தி மஞ்சள் அரண்கள் அமைத்திருந்தனர். எனது உடலெல்லாம் வியர்வை ஆனால் தொண்டை வறண்டுவிட்டது. தடயவியலாளர்கள் படங்கள் எடுத்ததும், நான் மாநிறமான ராமுவை அருகில் சென்று பார்த்தேன். என் மகன் விக்ரம், சட்டென்று என் நினைவுக்கு வந்தான். மனதை உறுதி செய்து கொண்டு, ஆய்வில் ஈடுபட்டேன். நான் கிரைம் பிரான்ச் இன்ஸ்பெக்டர் சீனுவாசன். ராமுவின் கை, கால்களில் கயிறு போன்று ஏதோ கட்டப்பட்ட தடம் இருந்தது. அப்போது,

"சார், இத பாத்தா, ஏதோ பகையின் காரணமா செஞ்ச மாதிரி இருக்கு" என்றார் ஏட்டு.

"இல்ல ஏட்டு, எனக்கென்னமோ அப்படி தோனல.. இத பண்ணவன் மட்டும் என் கைல கெடச்சான், அவ்ளோதான் அவன்" என்று பற்களை கடித்துக்கொண்டேன். அந்நேரம், எனது கைபேசி அதிர்ந்தது. அழைப்பை துண்டித்தேன்.

உடனே, காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு, காணாமல் போனவர்கள் புகார் பற்றி விசாரித்தேன். எனது பக்கத்துக்கு ஊரில், 10 வயது சிறுவன் ஒருவன் 4 நாட்களுக்கு முன்னால் காணாமல் போனது குறித்து தெரியவந்தது. புகார் கொடுத்தவர்களை தொலைபேசியில் அழைத்தேன்.

"ஹலோ, நான் இன்ஸ்பெக்டர் சீனு பேசுறேன், உங்க பையன காணும் இல்லையா?"

"ஆமாம் சார், நாலு நாள் ஆச்சு, எதாவது தகவல் இருக்கா" என்றது பெண் குரல்.

"கொஞ்சம் பதட்டப்படாம நான் சொல்றத கேளுங்க" என்றதும் எனக்கே பதட்டம் அதிகமானது. ஆனால் ராமுவின் தாய் சற்றும் கலங்கவில்லை.

"இல்ல சார், அது என் பையனா இருக்காது"

"சரீங்கம்மா, அத நீங்க ஒரு வாட்டி பாத்து கன்பார்ம் பண்ணிட்டா கொஞ்சம் நல்லா இருக்கும்" என்று சொல்லியவாறே ராமுவின் உடலுடன், இல்லை இல்லை, ராமுவுடன் அரசு மருத்துவமனைக்குச் சென்றேன்.

ராமுவின் தாய் வசந்தாவின் அலறலும், விழுந்து அழும் ஆர்ப்பாட்டமும், அது அவரின் மகன் என்பதை உறுதி செய்தது. வசந்தாவிற்கு எனக்கு சமாதானம் சொல்ல தெரியவில்லை.

"என் பையன கண்டுபிடுச்சிடுவீங்கன்னு தான் நெனச்சேன். ஆனா இந்த நிலைல கண்டு பிடிப்பீங்கன்னு நெனக்கல" என்று தன் தலையில் அடித்து கொண்டே கூறினார் வசந்தா.

        ஒரு தந்தையாக வசந்தாவின் வலியை என்னால் உணர முடிந்தது. மீண்டும் எனது கைபேசி அதிர்ந்தது. அழைப்பை துண்டித்தேன்.

"நீங்க வீட்டுக்கு போங்க, அப்புறமா உங்களோட கொஞ்சம் விசாரணை பண்ணனும்"

தன் கண்களில் இருந்த நீரை துடைத்தவாறு,

"என் பையனுக்கு நடந்த கதி வேற யாருக்கும் நடக்கக்கூடாது. ராமுவை இவங்க பொட்டலமா கட்டி தர்ற வரைக்கும் எனக்கும் ஒன்னும் வேலை இல்ல. நீங்க என்ன கேக்கணுமோ கேளுங்க" என்றார் வசந்தா. அவரின் வார்த்தைகள் மரத்துப்போன இதயத்தில் இருந்து வழியும் ரத்தத்துளிகளாகதெறித்தன.

"உங்க பையன் தொலஞ்சப்ப என்ன துணி போட்டிருந்தான்?"

"சிவப்பு நிற டிராயரும், பச்ச கோடு போட்ட சட்டையும் போட்டிருந்தான்... எனக்கு மட்டும் ஏன் தான் இப்படி நடக்குதோ. ராமுவும் அவன் அக்கா லட்சிமியும் 1000 தடவை அந்த ஏரிக்கரைக்கு விளையாட போயிருப்பாங்க. எனக்கு புரியல இது எப்படி நடந்ததுதுன்னு?" என்று மீண்டும் அழத்துவங்கினார் வசந்தா.

"கொலையாளியை சீக்கிரம் கண்டுபிடிக்கணும்னா, நீங்க எனக்கு ஒத்துழைப்பு தரணும்" என்றபோது மீண்டும் என் கைபேசி அதிர்ந்தது. இம்முறை துண்டிக்காமல், சற்று தள்ளி வந்து, காரசாரமான குரலில்,

"இப்ப உனக்கு என்ன வேணும், வேலையா இருக்கேன்னு தெரியும் இல்லையா"

"நம்ம பையனுக்கு ஜுரம் அடிக்குது. நல்லாவே அடிக்குது"

"அதுக்கு?"

"நீங்க வந்தா கொஞ்சம் நல்லாயிருக்கும்"

டக்கென்று அழைப்பை துண்டித்தாவாறு, 'இவளுக்கு வேற வேலையில்ல' என்று மனதில் எண்ணியபடி,

"மிஸ்ஸஸ் வசந்தா, உங்க பெரிய பொண்ணு லட்சுமி கிட்ட பேச முடியுமா. கொஞ்சம் கேள்வி கேக்கணும். ராமுவ கடைசியா பாத்தது அவதான"

"ஹ்ம்ம், ஆமாம். அவள பக்கத்து வீட்டுல இருக்கச்சொல்லிட்டு வந்துருக்கேன்"

"சரிங்க, நாளைக்கு வந்து அவள பாக்குறேன்" என்று கூறி நகர்ந்தேன்.

வசந்தா கூறியது போலவே, ராமுவின் சடலம் பொட்டலமாக கட்டி, அவசர ஊர்தியில் வீட்டிற்கு அனுப்பப்பட்டது. செய்தியை கேள்விப்பட்ட லட்சுமி, மனமுடைந்து கதறிக்கதறி அழுதாள். இவ்வளவு நடந்தும் ராமுவின் தந்தை அன்றிரவு வராமல் இருந்தது வியப்பை ஏற்படுத்தியது. வேலையின் காரணமாக வெளியூரில் இருப்பதாகவும், அடுத்த நாள் காலை வந்துவிடுவார் என்றும் தெரியவந்தது.

மறுநாள் மதியம், ராமுவின் வீட்டை அடைந்தேன். அக்குடும்பத்தின் உறவினர்கள் பலரும் அவரவர் வேளையில் ஈடுபட்டிருந்தார்கள். நீல நிற கட்டம் போட்ட கைலி கட்டிய நபர் ஒருவர் நேராக என்னிடம் வேகமாக வந்து, என் சட்டையை பிடித்து,

"நீங்கெல்லாம் இருந்து என்ன பிரயோஜனம். என் பையன் என்ன விட்டுட்டு போய்ட்டான். நீங்க மட்டும் சரியான நேரத்துல அவனை கண்டுபிடிச்சுருந்தா, என் ராமு இப்படி ஆயிருக்க மாட்டான்" என்று கதறி அழுதார். அவர் ராமுவின் தந்தை சங்கர். ஒரு வழியாக அவராகவே சமாதானமானார். எனது விசாரணையை தொடர்ந்தேன். எனக்கு முன்னால் ராமுவின் அக்கா லட்சுமி அமர்ந்திருந்தாள்.

"நீ கடைசியா உன் தம்பிய எங்க பாத்த?"
"..........."
"அவன் யாருகிட்டையோ பேசிக்கிட்டு இருந்தான்னு முன்னாடி சொன்னியாமே.. அந்த ஆள் எப்படி இருந்தான்?"
"..........."
பல கேள்விகள் கேட்டேன். அனைத்திற்கும் மௌனத்தையே விடையாக பரிமாறினாள் லட்சுமி. இதை கவனித்த வசந்தா, தன் மகளை  எனக்கு உதவும்படி வேண்டிக் கேட்டுக்கொண்டார்.
"அப்படியே சுத்தி பார்த்தேன், அவன காணும்" என்று பதிலை தந்தாள் லட்சுமி.
"சரி, நம்ம ஒன்னு பண்ணுவோமா, நீ ராமுவை கடைசியா எங்க பாத்தியோ, அங்கே போவோமா... நடந்தத அப்டியே சொல்லுணும், சரியா?"
முதலில் என் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்தாலும் இறுதியில் ஒப்புக்கொண்டார் சங்கர்.
நான், லட்சுமி, சங்கர் என மூவரும் ராமுவின் வீட்டருகில் இருக்கும் ஏரிக்கரைக்குச் சென்றோம். விளக்கமாக நடந்ததை செப்பினாள் லட்சுமி.
கரையோரமாக இருக்கும் ஒரு பெரிய கல்லை காண்பித்து,
"இங்க தான் நான் அவனை கடைசியா பாத்தேன். அப்போ, விளையாடிட்டு இருந்தான்.  ஒரு ஆள் வந்து அவன்கிட்ட பேச்சு கொடுத்தாரு. நான் உடனே என் தம்பிகிட்ட ஓடிப்போய் தெரியாத ஆளுகிட்ட பேசக்கூடாதுன்னு சொன்னேன்."
"அப்புறம் என்ன ஆச்சு"
"என் பிரெண்ட்ஸ் கூப்பிட்டாங்க, நான் ஓடிட்டேன்"
"ஹோ.. அப்போ  ராமு எவ்ளோ நேரம் உன் கண்ல படல?"
"தெரியல, அவன் என் கண்ல படவில்லைன்ன உடனே, நாங்க எல்லாம் சேர்ந்து கத்தினோம், தேடினோம். ஆனா கிடைக்கல. உடனே ஓடி போய் அம்மா கிட்டே சொல்லிட்டேன்."
"அப்படியா, அப்ப உங்க அப்பா எங்க இருந்தாரு?" என்ற என் கேள்விக்கு லட்சுமி பதிலளிப்பதற்குள், சங்கர் குறுக்கிட்டார்.
" சார், நான் டவுன்ல ஒரு ஐ.டி கம்பெனில வேல பாக்கிறேன். அடிக்கடி வெளியூர் போக வேண்டியது வரும். அப்படி  வெளியூர் போயிருந்தேன்."
எனக்கு குழப்பமாக இருந்தது. மகனை காணவில்லை அவனை தேடாமல் வெளியூரில் இருந்தேன் என்ற பதில் ஏற்புடையதாக எனக்கு படவில்லை.
"சார், எங்க அப்பா எங்க கூட இப்போலாம் இருக்கறது இல்ல. ரொம்ப நாளைக்கு முன்னாடியே சண்டை போட்டுக்கிட்டு வேற வீட்டுக்கு போயிட்டாரு..!!"
"என்னது வேற வீடா?" மேலும் தொடர்ந்தாள் லட்சுமி.
"ஆமாம் சார், எங்க அம்மாவையும் ஏதோ ஒரு பேப்பர்ல கையெழுத்து போட சொல்லி ரொம்ப தொல்ல பண்ணினார்."
"அட ஆமாங்க, எனக்கும் வசந்தாவுக்கும் சரிவர்ல. விவாகரத்துக்கு அப்ளை பண்ணிட்டேன். எல்லாம் ஹியரிங்கும் முடிஞ்சது. அடுத்த வாரம் தீர்ப்பு. இந்த நேரத்துல போயி, இவ என் பையன தொலைச்சிட்டு நிக்குறா"
அனைத்தையும்  உள் வாங்கியவாறு, லட்சுமியிடம்,
"அன்னிக்கி ராமு கத்தி யாரையாவது கூப்டானா?"
"இல்ல, ராமு கத்தின மாதிரி எனக்கு ஞாபகம் இல்ல."
"ராமு கிட்ட பேச்சு குடுத்த ஆள் எப்படி இருந்தான்னு உனக்கு ஞாபகம் இருக்கா?"
"இருக்கு சார், நல்லா உயரமா, ஒல்லியா இருந்தாரு, பெரிய மீசை வச்சிருந்தாரு."
"ஹ்ம்ம், ஒன்னு பண்ணலாம். நான் ஒருத்தர உனக்கு அறிமுகம் பண்றேன். அந்த ஆள் எப்படி இருந்தார்னு அவர்கிட்ட சொல்றியா..?"
"சரி" என்று என்னிடம் தலையை ஆட்டிவிட்டு தன் தந்தை பக்கம் திரும்பி,
"அப்பா, நான் மட்டும் ஒழுங்கா பாத்துகிட்டு இருந்தா, தம்பி காணாபோயிருக்க மாட்டான்." என்று கதறி அழுதாள் அந்த 11 வயதான லட்சுமி.
           
               நடந்த நிகழ்வுக்கு யாரும் காரணம் இல்லை என்று சாக்கு போக்கு சொல்லி லட்சுமியை தேத்தினார் சங்கர். லட்சுமியின் குற்ற உணர்ச்சி என்னையும் பற்றிக்கொண்டது. சங்கரையும் லட்சுமியையும் அவரது வீட்டில் விட்டுவிட்டு, பிரேத பரிசோதனை அறிக்கையை வாங்கிக்கொண்டு என் வீட்டை அடைந்தேன்.

        கதவை திறந்த என் மனைவி புதிய புடவையில் பூச்சூடி என்னை வரவேற்றாள். ஆனால், அவளை வர்ணிக்கும் மனநிலையில் நான் இல்லை. கடமைக்கே என்று சிரித்துவிட்டு,
"புடவை நல்லா இருக்கு, இப்ப பையனுக்கு எப்படி இருக்கு?" என்று கேட்டேன்.
"உங்க பையனுக்கு இப்ப பரவாயில்லை."
"சரி, சரி, எனக்கு பசியில்லை. நீ சாப்பிட்டு தூங்கு" என்று கூறி பிரேத பரிசோதனை அறிக்கையை படிக்க வேண்டும் என்ற மும்முரத்தில் என் அறைக்கு சென்று கதவை சாத்தினேன். மேலாடையை கழற்றி வேஷ்டிக்கு மாறினேன். அப்போது, கதவின் அடி வழியாக ஒரு துண்டு சீட்டை தள்ளினாள் என் மனைவி சுமதி. எடுத்து படித்தேன்.
"பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி" என்று எழுதி இருந்தது. சட்டென்று கதவை திறந்து,
"ஹாப்பி பர்த் டே" என்று அவளிடம் சொன்னேன். எப்பொழுதும் போல அவள் அழ ஆரம்பித்தாள். தேம்பியபடி,
"நான் இப்ப என்ன கேட்டுட்டேன், சிரிச்ச முகத்தோட ஒரு விஷ், அவ்ளோ தான, அதை கூட உங்களால தர முடியலையா?"
"ஐயய்ய... ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சுட்டியா? நீ என்ன சின்ன பொண்ணா உனக்கு கேக்கு வெட்ட.. அங்க ஒரு பையன வெட்டி கொல பண்ணிருக்காங்க. நான் அத கண்டுக்கவா, இல்ல உன்னோட கொஞ்சி குலாவவா.. உன்னை டிவோர்ஸ் பண்ணிடலாம்னு தோணுது..!!" என்று திட்டி கதவை சாத்தி அறிக்கையை படிக்கலானேன்.

        அறிக்கையில் இருந்த ஒவ்வொரு செய்தியும், கண்களில் நீரை வரவழைத்தது. இதை செய்தவனை பிடித்தாக வேண்டும் என்று மனதில் கங்கணம் கட்டிக் கொண்டு, தூங்கிக்கொண்டிருக்கும் என் மகனை, ஒரு நிமிடம் அருகில் அமர்ந்து அவன் மூச்சு விடுவதை ரசித்து விட்டு அவன் அருகிலேயே படுத்துக்கொண்டேன்.

        மறுநாள் காலை எழுந்த எனக்கு ஒரு புது உத்வேகம் தென்பட்டது. ராமுவை கொன்ற கொலையாளி அடுத்த கொலையை செய்வதற்குள், கண்டு பிடித்தாக வேண்டும். அப்போது எனது கதவு தட்டப்பட்டது. திறந்தால், சில கோப்புகளுடன் ஏட்டு நின்றுகொண்டிருந்தார். அவரை வரவேற்று உரையாடினேன்.
"சீனு சார், நீங்க சொன்ன மாதிரியே சில பழைய கேசுகளை அலசினேன்."
ஒரு வழக்கின் கோப்புகளை நீட்டி,

"இந்த கேசு ராமு கேசோட ஒத்து போகுது சார்." வாங்கி வழக்கின் தகவலை நுனிப்புல் மேய்ந்தேன். எனக்கும் அப்படியே தான் தோன்றியது. அது ஒரு ரெட்டை கொலை, கமல் மற்றும் விமல், 9 வயதான இரட்டையர்கள். இரு சிறுவர்கள் இறந்து கிடந்த விதமும் ராமு இறந்து கிடந்த விதமும் ஒத்து போனது. மேலும், ராமுவின் கால்களில் இருந்த கயிற்று தடமும் துல்லியமாக ஒத்து போனது. ஆனால், உயிர் போன விதம் மட்டும் மாறுபட்டது. உடனடியாக, ரெட்டை கொலையின் பிரேத பரிசோதனை கோப்புகளை, ராமுவை பரிசோதனை செய்த மருத்துவரிடம் காண்பித்தேன்.

"எனக்கென்னமோ, ரெண்டும் வேற வேறையாதான் தெரியிது. அந்த ரெண்டு பசங்களும் கத்தியால் குத்தப்பட்டு இறந்திருக்கங்க. ஆனால் ராமு, கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்திருக்கிறான். இது சீரியல் கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை." என்று கூறினார்.
எனது மனம் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து ரெட்டை கொலையை ஆய்வு செய்த இன்ஸ்பெக்டரை காணச்சென்றேன்.
"சொன்னா கேளுங்க சீனு, அந்த ரெட்டை கொலை பண்ண ஆள் இப்போ உள்ளே தான் இருக்கான். முக்கியமா, நீங்க சொல்ற பையன் ராமு கொலை செய்யப்படறதுக்கு முன்னாடிலேர்ந்தே அவன் ஜெயில்ல தான் இருக்கான்".

    அவரும் இது சீரியல் கொலையாக இருக்க வாய்ப்பு இல்லை என்று மறுதலித்துவிட்டார். ஊருக்கு திரும்பி, முன்பு சொன்னது போலவே, ராமுவின் அக்கா லட்சுமியிடம் ஓர் ஓவியரை அறிமுக படுத்தினேன். சிறுமி லட்சுமியும், ராமுவிடம் பேசியவனின் அங்க அடையாளங்களை கூற, அவரும் ஓர் உருவத்தை வரைந்து கொடுத்தார். அதை பார்த்து லட்சுமியும் உறுதி செய்தாள். அந்த உருவம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் ஃபேக்ஸ் மூலமாக அனுப்பப்பட்டது. ஏதேனும் தகவல் கிடைக்கும் என்று ஆழமாக நம்பினேன். அப்போது எனது புலனாய்வை விரிவு படுத்த எண்ணி, லட்சுமியின் தோழிகளிடமும் விசாரணை செய்தேன். எனக்கு ஒரு திருப்பம் காத்திருந்தது. லட்சுமியின் தோழி ரங்கநாயகி. அவளிடம் பேசிய போது, சம்பவம் நடந்த அன்று லட்சுமி தன் தம்பியிடம் சென்று பேசவில்லை என்று கூறினாள். ஆனால், "தெரியாதவர்களிடம் பேசாதே" என்று லட்சுமி ராமுவிடம் கூறியதாக சொன்னது நினைவிற்கு வர அதிர்ந்து போனேன். மேலும், அந்த ஆள் ஒரு டிராக்டரில் வந்திருந்ததாகவும், அவர் தோளில் ஓர் ஆடு இருந்ததாகவும் ரங்கநாயகி கூறினாள்.

        நிகழ்வு ஒன்று, ஆனால் பதிவுகள் இரண்டு. அப்படியானால், இருவரில் ஒருத்தி பொய் சொல்கிறாள் என்பது உறுதியானது. எனக்கோ ரங்கநாயகி பொய் சொல்ல தேவை இருப்பதாக தோன்றவில்லை. அப்படி இருக்க லட்சுமி பொய் சொல்ல வேண்டிய காரணம் என்ன என்ற கேள்விக்கு தெளிவு கிடைக்க வசந்தா-சங்கரை பார்க்கச்சென்றேன். மீண்டும் சங்கர் என்னை கடுமையாக திட்டினார்.

"என் பையன உயிரோடு பிடிக்க துப்பில்ல. அப்டியே வந்துட்டாரு"
கொலையாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம், சங்கரின் திட்டுகளை ஏற்க மறுத்தன. வசந்தா ஒத்துழைப்பு தர, மீண்டும் லட்சுமியை விசாரித்தேன். முன்பு சொன்னதையே சொன்னாள். எனக்கு கோவம் வர, சத்தத்தை உயர்த்தினேன். அது வசந்தாவுக்கு பிடிக்கவில்லை.
"பாரும்மா லட்சுமி, நீ உண்மையை சொன்னாதான் உன் தம்பியை உன்கிட்டேர்ந்து பிரிச்சவன பிடிக்க முடியும்..!!" என்று நான் கூறியவுடன் அழத்துவங்கினாள். தனது முதல் பதிவை மாற்றி, அந்த ஆள் இருக்கும் போது தான் ராமுவிடம் பேசவில்லை என்று கூறினாள். உடனே தன் தாயிடம் திரும்பி, "அம்மா, என்ன மனிச்சிடுங்க. பொய் சொல்லிட்டேன். ராமு தொலைஞ்சதுக்கு நான் தான் காரணம்னு நீங்க நெனச்சிடக் கூடாதுன்னு தான், ராமுவ எச்சரித்ததாக பொய் சொல்லிட்டேன்," என்று கூறி தேம்பி தேம்பி கண்ணீர் வடித்தாள். என் கண்களிலும் நீர் கோர்த்தது. வழிய விடாமல் பார்த்துக்கொண்டேன். எனக்கு அடுத்த சந்தேகம் உண்டானது. லட்சுமி ஒரு பொய் தான் சொல்லியிருப்பாளா? அப்படியானால், அவள் சொன்ன அடையாளங்களை வைத்து வரையப்பட்ட உருவத்தை நம்புவதா இல்லையா என்ற ஐயமும் மேலோங்கியது.

       இன்னும் பல அனுமானங்களும் கேள்விகளும் என்னை  உண்ணத்துவங்கின. ஏட்டை அழைத்துக்கொண்டு மீண்டும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்றேன். இப்போது எல்லாம் சி.சி.டி.வி இருப்பதுபோல் அப்போதில்லை. ஏரிக்கரைக்கும் ராமுவின் வீட்டிற்கும் இடையே ஒரு திருமண மண்டபம் இருந்தது. ராமு தொலைந்த அன்று ஏதேனும் நிகழ்ச்சி நடந்ததா என்று விசாரித்த பொழுது, திருமணம் ஒன்று நடந்ததாக தெரிய வர, அவர்களை பார்க்கச்சென்றேன். நடந்ததை கூறியவுடன், கல்யாண டேப்பை என்னிடம் கொடுத்தார்கள். வேகவேகமாக எடுத்து வந்து அதை போட்டு பார்த்தேன். அதில் ராமுவை பற்றி ஏதேனும் தகவல் கிடைக்குமா என்பதே சந்தேகம் தான். இருந்தாலும் வேறு வழி இல்லை. நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் காத்திருந்தது. ஒரு காட்சி பதிவில், ஆண் வீட்டாரை அழைக்கும் நிகழ்வை பதிவு செய்ய கேமராமேன் சாலைக்கு வந்து படம்பிடித்துள்ளார். அதில், தொலைவில் ஒரு சிறுவன் சாலையில் ஓடுவது தென்பட்டது. அவ்வளவு தெளிவாக இல்லை. இது நல்ல செய்தி. அந்த டேப்பில் இருந்த நேரம் ராமு காணாமல் போன நேரத்துடன் ஒத்துபோகவில்லை. அது தான் அந்த கெட்ட செய்தி. அப்படி இருக்க அது ராமுவாக இருக்க வாய்ப்பு இல்லை. அருகில் டிராக்டர் எதுவும் காணவில்லை. மனம் தளர்ந்தேன். என்னடா இது, எந்த துப்பும் கிடைக்கவில்லையே என்று விரக்தியானதும், எனது கைபேசி அதிர்ந்தது. எடுத்துபேசி அதிர்ந்து போனேன்.

"ஹலோ, என் பெயர் முத்து. நீங்கள் குறிப்பிடும் டிராக்டர் என்னுடையது தான். எனது தோளில் எப்பொழுதும் ஆடு இருக்கும்" என்ற குரல் என்னை புரட்டிபோட்டது. உடனடியாக ஜீப்பை எடுத்து, முத்துவின் வீட்டை அடைந்தேன். டிராக்டர் வெளியே நின்றது. விசாரணையை தொடர்ந்தேன். தான் ஒரு நிறுவனத்தில் வேலை செய்ததாகவும், ஒரு விபத்தின் காரணமாக வேலையை விட்டுவிட்டு வந்து, விவசாயம் செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தான் முத்து.

"அதெல்லாம் இருக்கட்டும், நீங்களா ஏன் போன் பண்ணீங்க?"
"பேப்பர்லயும் டி.வி.லயும் பாத்தேன். என்னோட அடையாளதொடு ஒத்து போச்சு. அதான், வேற யாராவது என்ன பத்தி சொல்ல போக, அது சந்தேகமா மாறும் இல்லையா, அதான் நானே போன் செய்தேன்." மேலும் தொடர்ந்தான் முத்து.  "அன்னிக்கி நானும் எரிகரைல தான் இருத்தேன். டிராக்டரை கழுவ போயிருந்தேன்." என்ற முத்துவின் வார்த்தைகள் ஏற்புடையவையாகவே இருந்தன.
"அப்படீன்னா, உங்களுக்கு ராமுவ தெரியாது. அவனுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்ல?"
"ஆமாம் சார், எனக்கு எதுவுமே தெரியாது."
"சரி, நான் எப்ப கூப்பிட்டாலும் ஸ்டேஷனுக்கு வரணும். வெளியூருக்கு போறதுன்னா, சொல்லிட்டு தான் போகணும்."

        சரி என்று தன் தலையை அசைத்த வண்ணம் தனது ஆட்டுக்குட்டியை தோளில் எடுத்து போட்டவாறு தன் வீட்டிற்குள் சென்றான் முத்து. அப்படியே நாட்கள் நகர, ராமுவின் 16 வது நாள் காரியம் வந்தது. அந்த காரியம் குறித்து எனக்கு தகவல் தெரிவிக்கப்படாவிட்டாலும் செல்வது என் கடமை என்றே எனக்கு தோன்றியது. அது வரையில் அப்படி தோன்றியதே இல்லை. முத்துவின் வீட்டை அடைந்தேன். மயான அமைதியில் வசந்தாவின் விசும்பல் சத்தம் மட்டும் கேட்டது. அவரது கையில் ஒரு வெள்ளை காகிதம் இருந்தது. மடியில் லட்சுமி தூங்கிக்கொண்டிருந்தாள். அக்காகிதத்தை, வாங்கி படித்தவாறு வெளியே வந்தேன். அது விவாகரத்து ஆன நீதிமன்ற தீர்ப்பு. அதை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, அந்த வீட்டு வளாகத்தின் மறுபுறம் ஒரு தலை தெரிந்தது. சத்தம் ஏற்படுத்தாமல் அமைதியாக அந்த தலையின் அருகில் சென்றேன். அந்த உருவத்தின் தோளை தொட முயலும் பொழுது, என்னை திரும்பிப்பார்த்து விட்டு ஓடத்துவங்கியது. அந்த உருவம் வேறு யாருமில்லை டிராக்டர் முத்து தான். முயலை வேட்டை நாய் துரத்துவது போல ஓடி முத்துவை பிடித்து கைது செய்து காவல் நிலையத்திற்கு இழுத்துச் சென்றேன். எனது பிரத்யேக அறையில் முத்துவை அடைத்து விசாரணையை தொடர்ந்தேன். மீண்டும் திருப்பம் காத்திருந்தது.

"ராமுவமட்டும் தான் கொன்னியா, இல்ல பல பசங்களையா?
"இல்ல சார், எனக்கு ராமுவ முன்னபின்ன தெரியாது. இதுவரை ராமுவை பார்த்ததுகூட கிடையாது."
"அப்ப, ஏன் ராமு வீட்டுக்கு வந்த?"
"சார், எனக்கு குற்றங்களை கண்டுபிடிப்பது ரொம்ப பிடிக்கும். துப்புகளை கண்டுபிடிகற்துல எனக்கு தனித்திறமை இருக்கு." என்ற வார்த்தைகளை கேட்டதும் குழப்பங்கள் என்னை சிறைப்பிடத்தன.
"என்ன உளர்ற முத்து. தனித்திறமையா?"
"ஆமாம் சார், நீங்க பேசிட்டு போனதும் என்னால கொலையாளியை கண்டுபிடிக்க முடியும்னு தோனுச்சு. அதான் ராமு வீட்டுக்கு வந்தேன்..!
"ஓ.. ஹோ.. அப்டீன்னா துப்பு ஏதாவது கெடச்சுதா?"
"இல்ல, அதுக்குள்ள தான் நீங்க என்னை அரெஸ்ட் பண்ணிடீங்களே..!!" என்று நானும் முத்துவும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஏட்டு வந்தார்.
"சார், இந்த முத்து கார் விபத்துல தலைல அடிபட்டு கொஞ்சம் நாள் மனநலம் சரியில்லாம இருந்திருக்கான்." அக்கம் பக்கத்தில் விசாரித்தைச் சொன்னார் ஏட்டு. அதனால் தான் முத்துவின் பேச்சு சற்று வித்யாசமாகவே இருந்திருக்கிறது. மேலும், லட்சுமி சொன்னதை வைத்து வரையப்பட்ட உருவம், முத்துவுடன் ஒத்து போகவில்லை.

        முத்துவை விடுத்துவிட்டு மீண்டும் ஒருமுறை அந்த கல்யாண டேப்பை புலனாய்வு செய்தேன். திருமணம் நிகழ்ந்த நேரமும், அந்த டேப்பில் இருந்த நேரமும் ஒத்து போகவில்லை. பின் தெரியவந்தது, அந்த கேமராவில் சரியான நேரத்தை குறிக்காமல் திருமணம் பதிவு செய்யப்பட்டதென்று. அதில் தெரிந்த சிறுவன் ராமு தான். ராமு ஏதோ காரில் ஏறும் காட்சியும் அதில் இடம் பெற்றிருந்தது. காரின் எண்ணை சோதித்த பொழுது, அது பிரசன்ன வர்மா என்பவரின் பெயரில் இருந்தது. அவர் ஒரு மனநல மருத்துவர். விலாசத்தை குறித்துக்கொண்டு, வர்மாவின் வீட்டை நோக்கி எனது ஜீப்பை செலுத்தினேன். அப்பொழுது, கட்டுப்பாட்டு அறையில் இருந்து அழைப்பு வந்தது. எடுத்து பேசியதும், என்னை மிரட்சி ஆட்கொண்டது. ஆம், ராமுவின் அக்கா லட்சுமியை காணவில்லை என்றும், யாரோ ஒருவர் காரில் ஏற்றிச் சென்றுவிட்டார் என்றும் தகவல் எனக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு சிறுவனுக்கோ சிறுமிக்கோ, எது நடந்துவிடக் கூடாதுன்னு நான் அஞ்சி அஞ்சி துரிதமாக செயல்பட்டேனோ, அதுவே அரங்கேறியது. பட்ட இடத்திலே படும், கெட்டக் குடியே கெடும் என்ற கூற்றிற்கிணங்க வசந்தா-சங்கர் தம்பதியின் மகளும் காணாமல் போயிருக்கிறாள். திசையை மாற்றி, ராமு வீட்டை அடைந்தேன். நடந்ததை உள்வாங்கிக்கொண்டு, விருவிருத்தபடி அங்கிருந்து வர்மா வீட்டை அடைந்தேன். அந்த வீட்டு மதில் சுவரில் இருந்து ஓர் உருவம் குதித்தது. நான் கைத்துப்பாக்கியை பிடித்தப்படி அந்த உருவத்தை நோக்கி நடக்கலானேன். முகமூடி அணிந்த உருவம், என்னை பார்த்து கையை அசைத்து 'வா, வா' என்றது. எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

"சார், நீங்க எப்படி இங்க?" குரலுக்கு சொந்தக்காரன் முத்து. அவன் வர்மா வீட்டு வாசலில் என்ன செய்கிறான் என்ற கேள்வியை கேட்கக்கூட இயலவில்லை. கிசுகிசுத்தக் குரலில்,
"சார், லட்சுமி உள்ள தான் இருக்கா, எப்படியாவது காப்பாத்தியாகனும். கார்லேர்ந்து தூக்கிட்டு போகும் போது, லட்சுமி மயக்கமா தான் இருந்தா. திடீர்னு யாரோ வரவே, வெளியே குதிச்சேன், நீங்க வந்தீங்க..."
நான் மண்டை ஆட்டி கேட்டுக்கொண்டிருக்க, நான் அவனைக் கேட்ட நினைத்த கேள்வியை என்னைக்கேட்டான் முத்து.
"வர்மா வீட்டு வாசல்ல நீங்க என்ன பண்றீங்க சார்?"
"முத்து நீ இங்கேயே இரு, நான் உள்ளே போகிறேன்" என்று கூறி துப்பாக்கியை முதுகு பெல்ட் பின்னாடி வைத்து விட்டு, வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினேன். இரவில் அணியக்கூடிய பெரிய கவுன் போன்ற ஒன்றை அணிந்து கொண்டு கதவை திறந்தார் வர்மா. அவர் முகத்தில் சிறிய கவலை தென்பட்டது. அவரிடமிருந்து லட்சுமியை எப்படி காப்பாற்றுவது என்று யோசனை செய்து கொண்டிருந்த பொழுது,

"சொல்லுங்க சீனு, என்ன வேணும்" என்றார்.
"ஒரு கேசு விஷயமாக உங்களை பார்க்க வந்தேன்"
"ஹோ, அப்படியா எனக்கு தான் இந்த உலகத்தோடு போராடி போராடி ஓரே விரக்தியா இருக்கு" என்றார் அந்த 50 வயதான பணக்கார வர்மா.
"என்ன சார் சொல்றீங்க, பெரிய கிளினிக்,  நல்ல வருமானம். வேறென்ன வேணும் டாக்டர். வர்மா?"
"இருக்கலாம், ஆனா மன நிம்மதி இல்லையே... இந்த அசிங்கமான, அருவருப்பான மனுஷங்களை பார்த்தாலே எனக்கு பிடிக்கல." அவர் என்ன பேசுகிறார், யாரை பற்றி பேசுகிறார் என்று எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை. 
"மிஸ்டர். சீனு, உங்களுக்கு திருமணம் ஆயிடிச்சா?"
"ஹ்ம்ம், ஆயிடுச்சு. 10 வருஷம் ஆச்சு. ஒரு பையன் இருக்கான்."
"ஹோ.... வாழ்த்துக்கள்.."
"தேங்க்ஸ்..!!"
"உங்க மனைவி உங்களை ஒழுங்கா நடத்துறாங்களா?" இந்த கேள்வியை நான் சற்றும் எதிர் நோக்கவில்லை.

    இவரை நம்ம கேள்வி கேட்க வந்தால், இவர் நம்மை விசாரணை செய்து கொண்டிருக்கிறாரே என்று எண்ணியவாறு,
"டாக்டர், நான் நேரா விஷயத்துக்கு வர்றேன். உங்களுக்கு விமல், கமல்னு யாரையாவது தெரியுமா?"
"அப்படின்னா, உங்களுக்கும் உங்க மனைவிக்கும் ஒத்து போகவில்லை.... அப்படித்தானே?"
"சார் பிலீஸ், தயவுசெய்து பதில் சொல்லுங்க.... ராமு லட்சுமின்னு யாரையாவது தெரியுமா?"
"ஹா, ஹா, ஹா....கண்டுபிடிச்சிட்டேன். சுமதியை நீங்க தான் சரியா நடத்துறது இல்ல, சரியா மிஸ்டர் சீனு?"
என்ற வார்த்தைகளை கேட்டதும் எனது வயிற்றில் புளியை கரைத்தது. என்னை பற்றி துல்லியமாக கூறுகிறாரே, எப்படி? சமாளித்தபடி,
"டாக்டர், என்னை பத்தி விடுங்க. நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க..!!"
"நீங்களும், சுமதியும் சண்டை போடும் பொழுது, விக்ரமுக்கு முன்னாடியே சண்டை போடுவீங்களா? இல்ல, ரூமுக்குள்ள போய் சண்டை போடுவீங்களா?"
பொறுமை இழந்த நான்,
"டாக்டர் வர்மா, லட்சுமி எங்கே? உங்க கார்ல தான் அவள் வந்தான்னு எனக்கு தெரியும்."
"லட்சுமி என்கிட்ட பத்திரமா இருக்கா. ஆனா உங்க பையன் விக்ரம் உன்கிட்ட பத்திரமா இருக்கானா?" என்று வர்மா என் மகனின் பெயரை சொல்லி பயமுறுத்திவிட்டார். உடனே எனது கைபேசியை எடுத்து வீட்டு தொலைபேசிக்கு அழைத்து சுமதியிடம் விக்ரமை பற்றி நலம் விசாரித்தேன்.
"அவன் நல்லாத்தான் இருக்கான். ஏன், என்ன ஆச்சு? திடீர்னு போன்லாம் பண்ணி கேக்குறீங்க... அதிசயமா இருக்கு..!!"
"சரி சரி, நான் பிறகு கூப்பிடறேன்."
"என்ன சீனு, ஆச்சர்யமா இருக்குன்னு சுமதி சொல்லிருப்பாங்களே..?!"
அவ்வளவு தான் மரியாதை என்று, என் கைத்துப்பாக்கியை எடுத்து அவர் முன் நீட்டி, லட்சுமியை விடுவிக்குமாறு கத்தினேன். ஆனால் அவரோ, இந்தியாவில் உள்ள குழந்தைகளின் நலனை பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது,
"கமல், விமல், ராமு எல்லாரையும் நான் காப்பாத்தறத்துக்குள்ளே எவ்வளவு கஷ்டபட்டேன்னு தெரியுமா? இப்ப லட்சுமியை வசந்தா-சங்கர் கிட்டேர்ந்து காப்பாத்த விடமாடீங்க போலிருக்கே?!"
மனநல மருத்துவராக இருந்து கொண்டு, மனநலம் பாதிக்கப்பட்டவரை போல் பேசிக்கொண்டிருந்தார் வர்மா.

"கமல், விமலோட அம்மா அப்பா கிட்ட எவ்வளவோ கெஞ்சினேன். நான் அவ்வளவு கௌன்சிலிங் கொடுத்தும் அவங்க விவாகரத்து செஞ்சிக்கிட்டாங்க. அப்படித்தான் வசந்தாவும் சங்கரும். என் பேச்சை கொஞ்சம் கூட கேக்கல. பசங்கள பத்தி கொஞ்சமாவது யோசிச்சாங்களா? இல்லை. அதனால தான் அந்த நரகத்துலேர்ந்து அவங்களுக்கு விடுதலை கொடுத்தேன். என்னோட அம்மா அப்பா பிரிந்த பிறகு நான் எவ்ளோ கஷ்டப்பட்டேன்னு தெரியுமா. பல நாட்கள் தூங்காமல் இருந்திருக்கிறேன். நரகவேதனை. என்னால இந்த சமுதாயத்தை திருத்த முடியும்ன்னு ஆழமா நம்பினேன். அதனாலதான் கோர்ட்லேர்ந்து என்கிட்ட கௌன்சிலிங்குக்கு வரும் ஜோடிகளுக்கு நல்லாவே அறிவரை சொல்லுவேன். அவங்க மனசை மாத்தி கிட்டா விட்டிடுவேன். பிரிஞ்சா, அவங்க கிட்டேர்ந்து அவங்க பசங்கள பிரிச்சு காப்பாத்திடுவேன்."
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த நான் குறுக்கிட்டு,
"என்னது....? விவாகரத்து பண்ணா, அவங்களோட பசங்கள கொன்னுடுவீங்களா?"

"ச்சே..ச்சே.... அப்படி சொல்லாதீங்க மிஸ்டர் சீனு. விவாகரத்து செஞ்சிகிட்ட அம்மா அப்பாகிட்டேர்ந்து அவங்க பசங்கள, பிறப்புரத்து செஞ்சிடுவேன். விவாகரத்துக்கு என் தீர்ப்பு பிறப்புரத்து" என்று சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது, ஜன்னல் வழியாக லட்சுமியை தோளில் சுமந்தபடி முத்து வெளியே ஓடிக்கொண்டிருப்பதை வர்மாவும் நானும்  பார்த்துவிட்டோம்.

"இதனாலதான் சொன்னேன், எனக்கு நிம்மதியே இல்லன்னு. எப்படியும் என்ன காப்பாத்த விடமாட்டீங்க..!" என்று வர்மா கூறியவாறு சட்டென்று என் கைத்துப்பாக்கியை பிடுங்கி தன் தாடை கீழே வைத்து சுட்டு மடிந்தார். அந்த 10 நிமிட பேச்சு வார்த்தை என் மனதில் அழியாத தழும்பாக மாறும் என்று நான் கடுகளவும் எண்ணவில்லை. ஆனால் அது தான் நடந்தது.

    கமல் விமல் இரட்டை கொலையில் தவறாக பிடிபட்ட ஆளும் விடுவிக்கப் பட்டான். லட்சுமியை காப்பாற்ற உதவிய முத்துவை காவல்துறையும் நீதித்துறையும் பாராட்டின. ராமு கொல்லப்பட்ட காரணம் தெரிந்ததும் சங்கர் அந்த விவாகரத்து ஆணையை கிழித்து எரிந்து தன் மனைவி வசந்தாவை கையெடுத்து கும்பிட்டு மன்னிப்புக்கேட்டார். அப்போது வசந்தா, "நடந்ததுக்கு நம்ம ரெண்டு பேரும் தான் காரணம்" என்று கூறி சங்கர் காலில் விழுந்து அழுதார். லட்சுமியை காப்பாற்றிய திருப்தியுடன், அங்கிருந்து புறப்பட்டு, கடைக்கு சென்று மல்லிகை பூவும் அல்வாவும் வாங்கிக்கொண்டு என் ஆசை சுமதியை பார்க்க ஆசை ஆசையாக சென்றேன்.

    விவாகரத்திற்கு பிறப்புரத்து ஒருபொழுதும் தீர்வில்லை என்றாலும், அது சமூகத்தின் மீது விழுந்த கசயடிதான். வாழ்வில் என்னதான் அழுத்தம் இருந்தாலும் விவாகரத்தை தவிர்த்து ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற கருத்தை இந்த வழக்கு எனக்கு உணர்த்தியது. இன்றளவும் என் சுமதியுடன் நான் இல்லறத்தில் நல்லறத்துடன் வாழ்ந்து வருகிறேன்.

முற்றும்.

5 comments:

  1. அருமையான சிறுகதை. வாசிப்பை தூண்டும் விதமாக இருந்தது. மேலும் தொடருங்கள் உங்கள் எழுத்தை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. Sensitive issue.. Nicely incorporated..

    ReplyDelete

ஞால ஞதி - சிறுகதை - விஜய் பீமநாதன்.

  தனது காய்கறி கடையில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்தும் , அதை பெரிதும் பொருட்படுத்தாமல் , ஒரு நீட்டு கம்பை தேடிக்கொண்டிருந்தாள் நட...