Thursday 16 July 2020

ATM PIN - TAMIL CRIME SUSPENSE SHORT STORY by Vijay Beemanadan

    மர்மமான முறையில் ஓர் உயர்நிலை பள்ளி ஆசிரியை காணாமல் போனார். யாரிடமும் சொல்லாமல் எங்காவது வெளியூர் சென்றுவிட்டாரா? இல்லை, யாராவது அவரை கடத்தி விட்டார்களா? தடயவியலின் உதவியுடன் காவல்துறையால் கண்டு பிடிக்க முடியுமா? வாருங்கள் துப்பரியலாம்.

(உண்மைச் சம்பவத்தை தழுவி)

    அமெரிக்காவில் மாற்றுத்திறனாளிகள் பள்ளி ஆசிரியை டயானா. அவரது சேவையின் காரணமாக "மிராக்கில் ஒர்க்கர்" என்ற புனைப்பெயர் பெற்றவர். மாணவர்களின் மற்றொரு தாயாக போற்றப்பட்டவர். 2004 ஆம் ஆண்டு ஒரு திங்கட்கிழமை, எப்பொழுதும் வர வேண்டிய நேரத்தில் அவர் பள்ளிக்கு வரவில்லை. தொலைபேசியில் அழைத்த போதும் பதில் இல்லை. அதனால் அன்று மாலை, சக ஊழியர்கள் டயானா ஏன் வரவில்லை என்று கேட்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றனர். அவர்களுக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த பொழுது, அனைத்து பொருட்களும் கலைந்து இருப்பதைக் கண்டு போலீசுக்கு தகவல் சொல்லப்பட்டது. அவர்கள் வந்து பார்த்த உடனே, கொள்ளை போனதை உறுதி செய்தனர். எலக்ட்ரானிக் பொருட்களை வீட்டில் காணவில்லை. குறிப்பாக டயானாவின் “357” வகை கைத்துப்பாக்கியை காணவில்லை. அந்த வீட்டின் ஹால் சோபாவில் சிறிய துளை ஓன்று இருந்தது. அதை நகர்த்தி பார்த்தபொழுது, தரையிலும் இருந்த துளை, அது புல்லட் துளை என்பதை உறுதி செய்தது. ஏதோ ஓர் அசம்பாவித சம்பவம் அரங்கேறியிருப்பதை அது காட்டியது. தடயவியல் நிபுணர்களுக்கு எந்த புதிய நபர்களின் கைரேகையும் டயானா வீட்டில் கிடைக்கவில்லை. முக்கியமாக டயானாவின் காரையும் காணவில்லை. ரத்தக்கறை இல்லாததால் குற்றம் நிகழ்ந்த பொழுது டயானா வீட்டில் இருந்திருக்க வாய்ப்பு இல்லை என்று போலீஸ் கருதினர். ஆனால் சில ஆதாரங்கள் அச்சத்தை தூண்டின. டயானாவின் இரு டென்னிஸ் ஷூக்களில் ஒரு ஷூவில் லேஸ் இல்லை. பர்ஸ் இருந்தது ஆனால் ஏ.டி.எம். கார்டு இல்லை. 3 ஏ.டி.எம். ரசீதுகள் சமையல் அறை மேஜையின் மீது கண்டறியப்பட்டன. அவர் காணாமல் போன நாளின் முந்தைய நாள் அதாவது ஞாயிற்றுகிழமை இரவு 8 மணிக்கு பயன்படுத்தப்பட்ட ரசீதுகள். அவை மூன்றும், ஏ.டி.எம். பின் நம்பர் தப்பாக போடப்பட்டதால் வந்த ரசீதுகள் என்று உறுதியானது. இவை சந்தேகத்தை வலுப்படுத்தின.

    டயானா காணாமல் போனது, அவர் வசித்த மாகாணத்தின் தலைப்புச் செய்தியாக மாறியது. 45 வயதான டயானா விவாகரத்து செய்யப்பட்டு, பையன்கள் இருவரும் வேறிடத்தில் வசித்ததால் தனிமையில் இருந்தவர். அவரது மாஜி கணவர் விசாரிக்கப்பட்ட பொழுது, காணாமல் போன இரவு 300 மைல் தூரத்தில் இருந்தார் என்றும், தனித்திருந்தும் இருவருக்கும் இடையே நல்லிணக்கமே இருந்தது என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. டயானா விமானத்தில் வேறு எங்கும் செல்லவில்லை என்பதை விமானத்துறை தரவுகள் உறுதிசெய்தன. அவரிடம் பயின்ற மாணவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எவ்வித எதிர்மறை ஆதாரங்களும் கிடைக்கவில்லை.

    ஏ.டி.எம். ரசீதுகள் புலனாய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அந்த ஏ.டி.எம். இருப்பது டயானா வீட்டிலிருந்து சுமாராக 1 மைல் தொலைவில் உள்ள ஒரு பெட்ரோல் பங் கில் என்று தெரியவந்தது. அங்கே உள்ள சி.சி.டி.வி பதிவுகள் ஆராயப்பட்டன. ஓர் ஒல்லியான உயரமான கருப்பு ஆள் அந்த ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தியதும் தெரியவந்தது. டயானாவின் வங்கிக் கணக்கு ஆராயப்பட்ட பொழுது, அந்த கருப்பு மனிதன் பயன்படுத்தி சரியாக 20 நிமிடங்கள் கழித்து வேறொரு இடத்தில் டயானாவின் அதே ஏ.டி.எம். கார்ட் பயன்படுத்தப்பட்டதும் அறியவந்தது. இரண்டாம் முறை பயன்படுத்தியது ஓர் இளம் பெண் என்றும், 20 வயதிற்குள் இருக்கலாம் என்றும், முக்கியமாக ஏ.டி.எம். பின் சரியாக பயன்படுத்தப் பட்டு, 400 டாலர்கள் எடுத்ததும் தெரியவந்தது. அந்த இரண்டாவது இடத்தின் சுற்றுப்புற சி.சி.டி.வி பதிவுகளை ஆராயும் பொழுது அந்த இருவரும் ஒரே காரில் வந்தது தெள்ளத்தெளிவானது. அதிலும் அந்தக் கார் டயானா உடையதென்பதும் உறுதியானது.

    சில மணிநேரங்கள் கழித்து, ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கும் ஒரு ரோட்டோரத்தில் ஒரு கார் எரிவதை பார்த்த மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர் புகார் அளித்தார். உடனடியாக போலீஸ் அங்கு சென்று தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். அந்த கார் டயானாயுடையது என்று தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த காரின் டிக்கியில் டயானா இல்லாதது போலீசுக்கு ஆறுதலாக இருந்தது. அதே இடத்தில், கனரக வெள்ளை காரை பார்த்ததாகவும் அந்த மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர் குறிப்பிட்டார். அவர் பார்த்த ஆட்களின் அங்க அடையாளங்கள், ஏ.டி.எம். சி.சி.டி.வி பதிவுகளில் இருந்தவர்களுடன் ஒத்துப்போனது. துர்தர்ஷ்டவசமாக, அவர் அந்த கனரக காரின் எண்ணை பார்க்க முடியாமல் போனது.

    புலனாய்வை துரிதப்படுத்திய தடயவியலாளர்கள், டயானா வீட்டில் இருந்த மது பாட்டில் ஒன்றின் அடிப்பகுதியில் பாதி கைரேகையை கண்டறிந்தனர். டயானாவின் உடல் கிடைக்காததாலும், நிறைய ரத்தக்கறை இல்லாததாலும் டயானா உயிருடன் இருப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஓரிரு தினங்களில் கனரக வெள்ளை கார் ஒன்று, நடு சாலையில் பழுதாகி நின்று போக, பெருத்த போக்குவரத்து நெரிசலை உண்டாக்கியது. அந்த சூழலை சரி செய்ய வந்த போக்குவரத்து போலீஸ், அங்க அடையாளங்கள் ஒத்துப்போக காரில் இருந்த இருவரை கைது செய்தனர். முதலாவது, 15 வயதான மியா என்ற இளம் பெண்ணும், இரண்டாவதாக அவளது தந்தை 38 வயதான ரான் ஜான்சன் என்பவரும். முதற்கட்ட விசாரணையில், அவர்களுக்கும் டயானா காணாமல் போனதுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதம் செய்தனர். பின்னர், ஒரு மெக்கானிக் ஷெட்டில் இருந்து காரை திருடியதாக ஒப்புக்கொண்டனர். அதே காரில் ஏ.டி.எம். கார்டும் பின்னும் இருந்ததாக தெரிவித்தான் ரான். டயானா காணாமல் போனது பற்றி செய்திகளில் வந்ததால், பயந்து போய், காரை எரித்துவிட்டால் திருட்டிலிருந்து தப்பிவிடலாம் என்று கருதியே காரை எரித்ததாக கூறினான் ரான். இந்த ரானின் கதையை போலீஸ் நம்ப மறுத்தது. ரானின் மீது பல வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    ஒரு வழியாக ரானிற்கும் டயானாவிற்குமான தொடர்பை கண்டறிந்தனர் போலீஸ். தோட்டம் சீரமைக்கும் பணிக்காக சில மாதங்களுக்கு முன் ரான் டயானாவிடம் வேலை செய்துள்ளான் என்பது தெரியவந்தது. டயானா காணாமல் போன இரவு, ரான் தன் மனைவி எலிசாவுடன் செல் போனில் பேசியுள்ளான். எலிசா அந்த உரையாடலை ஒத்துக்கொண்டாலும், வேறெதுவும் தெரியாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அந்நேரத்தில், மது பாட்டிலில் இருந்து கிடைத்த கைரேகை ரானுடன் ஒத்துப்போனது. ஆனாலும் ரான் தனக்கு எதுவும் தெரியாது என்ற நிலைப்பாட்டில் மாறவில்லை.

    இறுதியில் ரானின் மகள் மியா, டயானா சடலம் இருக்கும் இடத்தை சொல்லிவிட்டாள். அந்த இடம், ரான் அன்றிரவு செல் போனில் பேசிய டவருடன் ஒத்துப்போனது. மியா குறிப்பிட்ட இடத்தில் ஒரு சடலம் கண்டறியப்பட்டது. மிகவும் அழுகிய நிலையில் கிடைத்தாலும், பல முறை சுடப்பட்டது தெளிவாக தெரிந்தது. பற்கள் பரிசோதனையை வைத்து அது டயானா என்று உறுதிசெய்தனர் போலீஸ். அந்த சடலத்தின் கைகள், நீல நிற ஷூ லேஸால் பின்புறமாக கட்டப்பட்டு இருந்தது. தடயவியலின் உதவியால் அது டயானாவுடையது என்று நிரூபணமானது. இச்செய்தி அறிந்தவுடன், அவரின் மகன்களும், தோழமைகளும், மாணவர்களும் மீளா துக்கத்தில் ஆழ்ந்தனர்.
ரான் தங்கியிருந்த விடுதியில், டயானாவின் “357” வகை கைத்துப்பாக்கி, ஒரு பெட்டி, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை எடுக்கப்பட்டன. இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், தான் இதை செய்யவில்லை என்றும், தன் மகள் மனநலம் பாதிக்கப்பட்டவள் என்றும், கார் திருட்டில் மட்டுமே பங்கிருப்பதாகவும் வாதம் செய்தான்.

    பிரேத பரிசோதனையின் இறுதியில், டயானாவின் உடலில் இருந்த புல்லட், ரானின் விடுதியில் கண்டெடுக்கபட்ட “357” வகை துப்பாக்கியுடையது என்று உறுதியானது. மேலும், டியானாவின் சடலத்தில் அவர் பலாத்காரம் செய்யப்பட்ட தடம் இருந்ததால், அதில் கிடைத்த டி.என்.ஏ. ரானுடன் ஒப்பிடப்பட்டது. அப்பொழுது ரானின் மறுப்பு காற்றில் போனது, டி.என்.ஏ. மாதிரி ஒத்துப்போனது. வேறு வழியில்லாமல், குற்றத்தை ஒப்புக்கொண்டு நடந்ததை கூறினான்.

நடந்தது என்ன?
    தோட்டப்பராமரிப்புக்காக வந்த ரான் தன் மகளுக்கு மனநலம் சரியில்லை என்று கூறி பண உதவி கேட்டுள்ளான். இளகிய மணம் கொண்ட அந்த 45 வயது விவாகரத்தான அழகான ஆசிரியை டயானாவும் அவ்வப்பொழுது பணம் கொடுத்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில், ரான் தோட்ட வேலையில் இருக்கும் பொழுது, அவன் மகள் மியா ஒரு மன நோயாளி இல்லை என்று அறிந்த டயானா பணம் தர மறுத்து, அதுவரை கொடுத்த பணத்தையும் திருப்பி கேட்டுள்ளார். முடியாது என்று ரான் மறுக்க போலீசுக்கு போகபோவதாக மிரட்டியுள்ளார் டயானா. செய்வதறியாது திகைத்த ரான், டயானாவை தாக்க முற்படும் பொழுது, தன் தற்காப்பு கைத்துப்பாக்கியை எடுத்துள்ளார் டயானா. அதை லாவகமாக பிடுங்கிய ரான், துப்பாக்கி முனையில் ஷூ லேஸை வைத்து கைகளை பின்புறமாக கட்டியுள்ளான். தவறான ஏ.டி.எம். பின்னை டயானா குடுக்க, மூன்று முறை ரான் பணம் எடுக்க முயற்சித்தும் தோல்வியால் மிகுந்த கோபம் அடைந்தான். சரியான ஏ.டி.எம் பின்னை சொல்லாவிட்டால் கொன்றுவிடுவதாக கூறி சோபாவில் சுட்டான் ரான். அதிர்ந்த டயானா, சரியான பின்னை கொடுத்தார். என்னென்னவோ நடந்து விட்டதே என்று எண்ணியவாறு வியர்த்து விருவிருத்த ரான் தோட்ட கையுரைகளை அவிழ்த்து விட்டு டயானா வீட்டு பிரிட்ஜில் இருந்து மது அருந்தினான். போதை தலைக்கேற, டயானாவை அங்கேயே பலாத்காரம் செய்துள்ளான். தப்பிற்கு மேல் தப்பு நடந்ததால், அங்கே கொள்ளை நடந்தது போல் ஒரு பிம்பத்தை உருவாக்கிவிட்டு பதற்றத்தில் "ட்ரான்ஸாக்ஷன் பெயில்டு" என்ற 3 ஏ.டி.எம் ரசீதுகளை அங்கேயே விட்டுவிட்டான். அக்கம் பக்கம் சந்தேகம் வராதவாறு தோட்டகுப்பை போடும் பையில் டயானாவை கட்டி அவரின் காரிலேயே தப்பிச்சென்றனர். வழியில் நிறுத்தி தன் மகளை அனுப்பி வழிசெலவுக்கு 400 டாலரை எடுத்து வரச்சொன்னான். பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாத ஓர் இடத்தில், பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி  வைக்கும் எண்ணத்தில் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றான். வழக்கை திசை திருப்ப காரை எரித்துள்ளான்.

    இந்த குற்றத்திற்கு அந்த 15 வயதான இளம் பெண் துணைபோனது அனைவருக்கும் மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. என்னதான் செய்யும் தவறை மறைத்தாலும், இறுதியில் உண்மை வெளிச்சத்திற்கு வந்து, ரானை சிறை இருளில் தள்ளியது.

முற்றும்   

4 comments:

  1. விறுவிறுப்பான எழுத்து நடை

    ReplyDelete
  2. மிகவும் அருமையாக இருந்தது. வாசிக்கும்பொழுது கண்முன்னே காணொளியில் பார்ப்பது போன்று உங்கள் எழுத்து நடை இருந்தது. திரைக்கதை வசனம் எழுத நீங்கள் முயற்சி செய்யலாம். வாழ்த்துக்கள் உங்கள் எழுத்து பயணத்திற்கு. 👌👌👍👍🙏🙏 - geetha ganesh

    ReplyDelete
    Replies
    1. ஊக்கத்திற்கும் வாழ்த்திற்கும் நன்றி.

      Delete

ஞால ஞதி - சிறுகதை - விஜய் பீமநாதன்.

  தனது காய்கறி கடையில் அதிக வாடிக்கையாளர்கள் இருந்தும் , அதை பெரிதும் பொருட்படுத்தாமல் , ஒரு நீட்டு கம்பை தேடிக்கொண்டிருந்தாள் நட...